ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேராவை நியமித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் முன்னணி வர்த்தகர்கலில் ஒருவரான தம்மிக்க பெரேராவின் பெயர் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கான விண்ணப்பம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமினால் கையளிக்கப்பட்டது. அதேவேளை நாட்டில் வர்த்தக வலையமைப்பு ஒன்றின் தலைவராக செயற்படும் தம்மிக்க பெரேரா, அப்பதவியில் இருந்து விலக உள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்காக தம்மிக்க பெரேரா தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கிறார்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றதன் பின்னர் அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதுவரை அது தொடர்பான இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.