”ஜனாதிபதியை தமிழரசுக்கட்சி சந்தித்த போது அந்த சந்திப்பை புறக்கணித்த சுமந்திரன், ஜனாதிபதியின் அடுத்த சந்திப்புக்கான தமிழரசுக்கட்சியின் தலைவருக்கான அழைப்பை கட்சியும் தலைவரும் புறக்கணித்தபோது ”தனி ஒருவனாக” பங்கேற்றது ஏன்?
சுமந்திரன் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் நுழைந்த காலத்தில் இருந்தே தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை வலுவிழக்கச்செய்யும் பல்வேறு செயற்பாடுகளையும் முன்னெடுப்பதுடன் கட்சிக்கு முரணாகவும் செயற்படும் நிலையில் இதுவரையில் கட்சி ரீதியாக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமை ஏன் ?
இலங்கை தமிழரசுக்கட்சி உட்கட்சி முரண்பாடுகளினாலும் பதவி ஆசைகளினாலும் காணாமல் போய்க் கொண்டிருந்தாலும் சர்ச்சைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் நீயா,நானா கௌரவப் பிரச்சினைகளுக்கும் மட்டும் குறைவில்லை.
அண்மைக்காலமாக இப்படியான சர்ச்சைகள் பெரும்பாலும், இலங்கை தமிழரசு கட்சியில், தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோற்றவரும் செயலாளர் பதவி கேட்டும் நிராகரிக்கப்பட்டவரும் இலங்கை தமிழரசுக்கட்சிக்கு எதிரான உள்வீட்டு வழக்குகளின் சூத்திரதாரி என கட்சிக்குள்ளேயே குற்றம்சாட்டப்படுபவரும் இலங்கை தமிழரசுக்கட்சிக்குள் தனி ஒருவனாக தான் நினைத்ததை செய்துவருபவருமான ஆபிரகாம் மதியாபரணம் சுமந்திரனையே சுற்றி வருகின்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி கண்ட பின்னர் மட்டும் சுமந்திரன் இவ்வாறு தனி ஒருவனாக செயற்படவில்லை. அதற்கு முன்னரும் அவர் தன்னை கட்சியில் எவரும் கட்டுப்படுத்த முடியாத, கேள்வி கேட்க முடியாத ஒரு சக்தியாக, நபராக நினைத்துக்கொண்டே கட்சியின் கொள்கைக்கும் தமிழ் மக்களின் நிலைப்பாட்டுக்கு மாற்றாகவும், பல கருத்துக்களையும் வெளியிட்டும் செயற்பட்டும் கட்சிக்கும் தமிழ் மக்களுக்கும் விரோதமாகவே செயற்பட்டு வருகின்றார்.
தனது இறுதிக்கட்ட செயற்பாடுகளாக அவர் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளை சந்தித்தபோது அதில் இலங்கை தமிழரசுக்கட்சி பங்கேற்றபோதும் அதில் பங்கேற்காது சுமந்திரன் புறக்கணித்தார்.
அதேவேளை சர்வதேச நாணய நிதியத்தினருடனான சந்திப்பு தொடர்பில் கலந்துரையாட வருமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, ஜே .வி.பி. தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் எஸ், சிறிதரன் ஆகியோருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் இந்த ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அழைப்பை 3 கட்சிகளின் தலைவர்களும் புறக்கணித்த நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியை சேர்ந்த சுமந்திரன் மட்டும் அதில் பங்கேற்றார்.
தனக்கு ஜனாதிபதி தனிப்பட்ட அழைப்பை விடுத்ததாக ஒரு கதையையும் அவர் தனது விசுவாச ஊடகர்கள் மூலம் கசிய விட்டிருந்தார்.
தனது கட்சி ஜனாதிபதியின் அழைப்பை புறக்கணித்த நிலையில் அக்கட்சியை சேர்ந்த சுமந்திரனால் தனிப்பட்ட அழைப்பு என்ற ரீதியில் எவ்வாறு அதில் பங்கேற்க முடியும்? அவ்வாறானால் சுமந்திரன் கட்சிக்கு, அதன் கொள்கைக்கு கட்டுப்பட்டவர் இல்லையா?
அதேபோன்றே கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் வெட்டுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்ட பூசகருள்ளிட்டவர்க களை விடுதலை செய்யக்கோரியும், பொலிஸாரின் அராஜகமான நடவடிக்கைக்கு எதிரானதுமான தமிழ், மலையக கட்சிகளின் போராட்டத்திற்கு பிரதான எதிர்கட்சித்தலைவரான சஜித் பிரேமதாசவே சபைக்கு நடுவே இறங்கி ஆதரவு தெரிவித்து போராடியபோதும் இந்த சுமந்திரன் அந்த நேரம் சபைக்கு வருகை தரவில்லை.
ஆனால் அதன் பின்னர் சபைக்குள் வந்து சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் நீண்ட நேரம் உரையாற்றினார்.
இது மட்டுமல்ல இலங்கை தமிழரசுக்கட்சிக்கும், அதன் கொள்கைக்கும், தமிழ் மக்களின் நிலைப்பட்டிற்கும் விடுதலைப்புலிகளின் உரிமைப்போராட்டத்திற்கும் எதிராக சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கள், செயற்பாடுகள் ஒன்று இரண்டல்ல.
வடக்கு, கிழக்கில் தமிழினப்படுகொலை இடம்பெறவில்லை. போர்க்குற்றம் தொடர்பில் இலங்கை இராணுவத்தை சர்வதேசம் விசாரணை செய்வதென்றால் விடுதலைப்புலிகளையும் விசாரணை செய்ய வேண்டும்.
வடக்கில் இடம்பெற்றது தமிழினப்படுகொலை என வடக்கு மாகாண சபையில் அப்போதைய முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நிறைவேற்றிய தீர்மானம் தவறு, விடுதலைப் புலிகளையோ அவர்களின் கொள்கைகளையோ நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என சுமந்திரன் எம்.பி. பகிரங்கமாகவே கூறியிருந்தார்.
அதுமட்டுமன்றி இலங்கை இராணுவ வீரர்களை கௌரவிக்கும் வகையில் சுமந்திரன், ஏனைய சிங்கள எம்.பி.க்கள் போன்று பொப்பி மலரை தன்னுடைய ஆடையில் அணிந்தவாறு நாடாளுமன்றத்திற்கு சமூகமளித்திருந்தார்.
அத்துடன் வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட தினத்தை நினைவு கூர்ந்து இடம்பெற்ற முஸ்லிம்களின் கூட்டமொன்றில் பேசிய சுமந்திரன் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியமையானது ஒரு இனச்சுத்திகரிப்பு. இதனை எண்ணி நான் வெட்கித் தலைகுனிகின்றேன். இதற்கு ஒவ்வொரு தமிழரும் பொறுப்பேற்க வேண்டும். இது தொடர்பில் வடக்கு மாகாண சபையில் ஒரு பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
ஆனால் அந்தக்கூட்டத்திலோ அல்லது வேறு எந்தவொரு இடத்திலோ கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களினால் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள், ஊர்காவல்படை என்ற பெயரில் முஸ்லிம் ஆயுததாரிகளினால் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டமை, தமிழ் மக்களின் போராட்டத்திற்கு எதிராக முஸ்லிம்கள் செய்த காட்டிக்கொடுப்புக்கள், தற்போது கூட கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக முஸ்லிம்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நில ஆக்கிரமிப்புக்கள், அடாவடிகள், கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்திற்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் அவர் வாயே திறக்கவில்லை.
இவற்றுக்கு எல்லாம் உச்சமாக தன்னை 2010 ஆம் ஆண்டு தேசியப்பட்டியல் ஊடாக ஒரு எம்.பி.யாக நாடாளுமன்றம் அழைத்துவந்து அரசியல் முகவரி கொடுத்து தனக்கு அடுத்த நிலையில் வைத்து வளர்த்தவரான அப்போதைய இலங்கை தமிழரசுக்கட்சியினதும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினதும் தலைவரான இரா. சம்பந்தனையே எம்.பி. பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டும்.
சம்பந்தன் ஒரு செயற்பட முடியாத தலைவர். அவரால் திருகோணமலை மாவட்டத்திற்கோ மக்களுக்கு எந்த பிரயோசனமும் இல்லை எனப்போர்க் கொடி தூக்கி முதுகில் குத்தியவர் இந்த சுமந்திரன்.
சுமந்திரன் 2010 ஆண்டில் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் நுழைந்த காலத்தில் இருந்தே தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை வலுவிழந்துபோகச் செய்யக்கூடிய பல்வேறு வகையிலான செயற்பாடுகளையும் முன்னெடுப்பதுடன் விடுதலைப்புலிகள் அமைப்பின் போராட்டச் செயற்பாட்டையும் நிராகரித்தே வருகின்றார்.
ஆனால் தமிழரசுக் கட்சியின் தலைவர்கள், சுமந்திரன் விடுதலைப்புலிகள் அமைப்பின் போராட்டச் செயற்பாட்டை நிராகரிப்பதையும் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் அவரது நடவடிக்கைகளையும் அது தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு அல்ல என்றும், அது அவரது தனிப்பட்ட நிலைப்பாடு எனவும் கூறித் தப்பிக்கின்றனர்.
கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக உறுப்பினர் எவரும் செயற்படும்போது அதற்குரிய ஒழுங்கு நடவடிக்கையெடுக்கப்பட்டு அதன் விளைவுகளை அந்த உறுப்பினர் எதிர் கொள்ள வேண்டுமே தவிர, அவ்வாறு செய்யாது, கட்சிக்கும் அதற்கும் தொடர்பில்லை’ என மட்டும் கூறுவதோ அல்லது கண்டனமும் கவலையும் தெரிவிப்பதோ வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாக மட்டுமே இருக்க முடியும்.
சுமந்திரனின் இவ்வாறான ”தனி ஒருவன்” நடவடிக்கை தொடர்பில் இலங்கை தமிழரசுக்கட்சியினால் எந்தவொரு நடவடிக்கையும் பெரும் தலைவர் இரா. சம்பந்தன் காலத்திலேயே எடுக்க முடியாத நிலையில் இன்று இலங்கை தமிழரசுக்கட்சிக்கு தலைமையே இல்லாத நிலையில் கட்சியினால் என்னதான் செய்ய முடியும்?
எனவே தமிழரசுக்கட்சியின் தலைவர் பதவியும் இல்லை. செயலாளர் பதவியும் கேட்டுக் கிடைக்கவில்லை. பினாமிகளை வைத்து வழக்குகள் போட்டும் கட்சி மடங்கவில்லை என்பதனால் கட்சியின் கொள்கைக்கும் தமிழ் மக்களின் நிலைப்பாட்டுக்கும் முரணாக செயற்பட்டு அதன் மூலம் தன் மீது கட்சி ரீதியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதனைப் பயன்படுத்தி எதிர்வரும் புதிய அரசில் தேசியப்பட்டியல் ஊடாகவேணும் அமைச்சுப்பதவி பெற்றுக்கொள்ளும் திட்டத்தின் வெளிப்பாடுகளே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடத்திய வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளை சந்தித்தபோது அதில் இலங்கை தமிழரசுக்கட்சி பங்கேற்றபோதும் அதில் பங்கேற்காது சுமந்திரன் புறக்கணித்தமையும் சர்வதேச நாணய நிதியத்தினருடனான சந்திப்பு தொடர்பில் கலந்துரையாட வருமாறு இலங்கை த்தமிழரசுக்கட்சியின் தலைவருக்கு ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட அழைப்பை கட்சியும் தலைவரும் புறக்கணித்த நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியை சேர்ந்த சுமந்திரன் மட்டும் அதில் பங்கேற்மையும் என்ற எதிர்வு கூறல்களையும் இல்லையென ஒரேயடியாக மறுத்துவிட முடியாது. என குறித்த தகவலை முகநூலில் கே. பாலா என்பவர் பதிவிட்டுள்ளார்.