தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார வழிகாட்டல்களை மீறியமை தொடர்பில் மேல் மாகாணம் உட்பட நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை நடவடிக்கைகளில், இதுவரை 3,121 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி குற்றத்தில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுபவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு அமைய, ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் இதுவரை 3,121 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, அவர் சுட்டிகாட்டினார்.
இதேவேளை, அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுகின்ற விடயம் தொடர்பில், சுமார் 12,000 நிறுவனங்கள் இதுவரை சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றில் சுமார் 1,400 நிறுவனங்கள் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியுள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் குறித்த நிறுவனங்களின் நிர்வாகம் மற்றும் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் பொலிஸ் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
வீட்டை விட்டு வெளியேறும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக்கவசத்தை கட்டாயம் அணியுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதாக அஜித் ரோஹண தெரிவித்தார்.