டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பணியகம் தெரிவித்தது.
கடந்த மூன்று வாரங்களில், வாரம் ஒன்றிற்கு 700 நோயாளர்கள் என்ற அடிப்படையில் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் ஹிமாலி ஹேரத் தெரிவித்துள்ளார்.
பருவப்பெயர்ச்சி மாற்றம் ஏற்படுகின்ற காலப்பகுதியில் ஒவ்வொரு வருடமும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
அதற்கமைய, தற்போது பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 9 ஆயிரத்து 361 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அவர்களில் அதிகளவானவர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்தது.
நாட்டில் 10 மாவட்டங்கள் டெங்கு நோய் அபாய வலயங்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, குருநாகல், இரத்தினபுரி, கேகாலை, ஹம்பாந்தோட்டை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களே டெங்கு அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன.
டெங்கு நுளம்பு பரவுவதனை ஒழிப்பதற்கு தேவையான கிராம மட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் ஹிமாலி ஹேரத் தெரிவித்துள்ளார்.