எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொது வேட்பாளராக முன்னிறுத்துவதற்கான பரந்த கூட்டணியொன்று உருவாக்கப்பட உள்ளதாக அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் கட்சி ஒன்றின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைவாக அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்றிணைந்து அமைக்கப்படவுள்ள கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மை ஆதரவை ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களின் ஆதரவில் கட்டியெழுப்பப்படவுள்ள ஐக்கிய முன்னணியின் கீழ் கட்டியெழுப்பப்படவுள்ள கூட்டணியில் பெரும்பான்மையான சிறு கட்சிகள் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிமல் லான்சா, சுசில் பிரேமஜயந்த, பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட குழுவினர், எதிர்காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அதே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, யாருக்கு ஆதரவு வழங்குவது என இதுவரை அறிவிக்கவில்லை.
இதற்கிடையில் வடக்கில் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட குழுக்களும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ள போதிலும், இது உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
எதிர்வரும் பொதுத் தேர்தலோ அல்லது ஜனாதிபதித் தேர்தலோ இந்நாட்டில் அதிக கூட்டணிகளை கொண்ட தேர்தலாக மாறும் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக அமைந்துள்ளது.