வறுமையால் ஒரு மகள் இறந்து விட, புத்திசுவாதீனமில்லாத ஒரு மகன் எங்கோ போய் விட, பக்கவாதத்தால் படுத்த படுக்கையான கணவரையும், பார்வை குறைபாடுள்ள மகனையும் சுக்கு காபி விற்று காப்பாற்றி வரும், சரஸ்வதி பாட்டி குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
இப்போது எப்படி இருக்கிறார் அவர் என அறிய, நேரில் சென்றோம்…!நம் செய்தியை படித்த வாசகர்கள், ரங்கேகவுடர் வீதி அருகில் ஈஸ்வரன் கோவில் வீதியில் வசிக்கும் சரஸ்வதி பாட்டியின் வீட்டுக்கே சென்று, தங்களால் முடிந்த பண உதவியை செய்துள்ளனர். ஒவ்வொருவரும் 1000, 2000, 10 ஆயிரம் என, 40 ஆயிரம் வரை பணம் கொடுத்து உதவி உள்ளனர்.நம்மிடம் பேச, பேச அவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை…
”நான் ஒரு சாதாரண மனிஷிங்கையா, இந்த கிழவி மேல ஜனங்க இம்புட்டு பிரியம் காட்டுவாங்கன்னு எனக்கு தெரியாது. நீங்க பேப்பருல போட்டத பாத்துட்டு, போன்ல கூப்பிட்டு பல பேரு ஆறுதல் சொன்னாங்க,””திருப்பூருல இருந்து இந்திரான்னு ஒரு அம்மா, போன்ல விலாசத்தை விசாரிச்சு வீட்டுக்கே வந்துட்டாங்க. என்ன பார்த்துட்டு அப்படியே அழுதுட்டாங்க. பையிலிருந்து, 25 ஆயிரம் பணத்த எடுத்து கொடுத்துட்டு, ‘கவலப்படாதிங்க பாட்டி, கடவுள் இருக்கார், காப்பாத்துவார்’ன்னாங்க,”
”எனக்கு அப்ப அவங்கதான் கடவுளா தெரிஞ்சாங்க. முதல்ல, பேரக்கூட சொல்ல மாட்டேன்னுட்டாங்க, கெஞ்சி கேட்டதால சொன்னாங்க. அப்புறம் மீனாட்சின்னு ஒரு டாக்டரம்மா வந்து, 10 ஆயிரம் ரூபா கொடுத்தாங்க,”
”செல் நம்பர கொடுத்து, ஏதாவது கஷ்டமுன்னா கூப்பிடுங்கன்னு சொன்னாங்க. அப்புறம் ரெண்டு பேரு ரெண்டாயிரம் கொடுத்தங்க, ரெண்டு பேரு ஆயிரம் ஆயிரம் கொடுத்தாங்க. பணம் கொடுத்தது ஒரு பக்கம் இருக்கட்டுங்கையா, அவங்க கட்டுன பாசம் இருக்கு பாருங்க, அத என்னால சாகுற வரை மறக்க முடியாது,”
”சின்ன குழந்தைக எல்லாம் வந்து, கையப்பிடிச்சு கவலப்படாதிங்க பாட்டிங்கிறாங்க. ஆண்டவன் அவங்களுக்கு நல்ல ஆயுச கொடுக்கணும். இந்த பணத்துல கொஞ்சத்தை, வீட்டுக்காரரு வைத்திய செலவுக்கு வெச்சுக்கிட்டு, 10 மாச வீட்டு வாடகை பாக்கி இருந்தது. அதை கொடுத்துட்டேன். உங்க பேப்பருக்கு ரொம்ப நன்றிங்கையா,” என்று கைகூப்பினார்.
மனிதம் போற்றும் மனங்களுக்கு தலைவணங்குகிறேன்.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🏳️🌈🏳️🌈🏳️🌈🏳️🌈🏳️🌈🏳️🌈🏳️🌈🏳️🌈🏳️🌈🏳️🌈🏳️🌈🏳️🌈