தீலிபனின் நினைவுதினத்தை அனுஸ்டித்தமை தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தை 2023 ஜனவரி மாதம் 11ம் திகதி காலை 8 மணிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு சமூகம் அளிக்குமாறு நீதிமன்ற கட்டளை வழங்கப்பட்டது.
நேற்று (31) எம்.கே சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்கு சென்ற வல்வெட்டித்துறைப் பொலிஸார் நீதிமன்ற கட்டளையை வழங்கினர்.
தியாகி திலீபனின் நினைவுதினத்தை முன்னிட்டு நீதிமன்ற தடையை மீறி தீலிபனின் நினைவுதினத்தை அனுஸ்டித்த குற்றச்சாட்டின் கீழ் எம்.கே.சிவாஜிலிங்கம் கோண்டாவில் பகுதியில் அன்னங்கை ஒழுங்கையில் வைத்து 2020 செப்டம்பர் 15ம் திகதி கைதுசெய்யப்பட்டார்.
நீதிமன்ற தடையுத்தரவை மீறியமை மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினரை நினைவுகூர்ந்தமை உள்ளிட்ட குற்றசாட்டின் கீழ் யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட எம்.கே. சிவாஜிலிங்கத்தை மன்று எச்சரித்து 2 இலட்ச ரூபாய் கொண்ட சரீரப் பிணையில் விடுவித்திருந்தது.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என இலங்கை அரசாங்கம் தெரிவித்தாலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பாக வல்வெட்டித்துறையில் இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், தீலிபனின் நினைவுதினத்தை அனுஸ்டித்தமை தொடர்பாக கைது செய்து 24 மணி நேரம் தடுத்துவைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தை வழக்கில் புகுத்தக்கூடிய வகையிலே பொலிசார் முயற்சிகள் எடுத்ததை நான் அறிந்தேன்.
பின்னர் சாதாரண சட்டத்தின் கீழ் நான் முன்னிலைப்படுத்தப்பட்டேன் எது எப்படி இருந்தாலும் கடந்த ஆண்டு நடைபெற்ற விசாரணையின் போது பயங்கரவாத சட்டத்தின் கீழ் நாங்கள் இந்த வழக்கை தாக்கல் செய்ய யோசித்து இருக்கின்றோம். சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு இதன் கோவை அனுப்பப்பட்டு இருக்கின்றது என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த அடிப்படையில் நேற்றைய தினம் எனது வீட்டிற்கு வந்த பொலிஸார் எனக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிமன்ற கட்டளையை வழங்கிச் சென்றனர்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செயலுக்காக யாழ்ப்பாணத்தில் உயர்நீதிமன்றம் இருக்கத்தக்கதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நோக்கம் என்ன? பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்தார்களா அல்லது பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒத்ததாக புலிகளின் மீளுருவாக்கம் போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தப்பட்டிருக்கிறதா என்பது குற்றப்பத்திரிகை வழங்கிய பின்னரே தெரியும். பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என கூறப்படும் போது இவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன-என்றார்.