இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் முக்கிய சந்தேக நபர் தொடர்பில், நன்கு அறிந்த தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படாமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்பிலேயே கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 250ற்கும் மேற்பட்ட உயிர்களை காவுகொள்ள வழிவகுத்த மொஹமட் சஹ்ரான் ஹாஷிம் தொடர்பில் இலங்கையின், முன்னாள் பாதுகாப்பு செயலாளரும், தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ச, நன்கு அறிவார் என மகளிர் அமைப்பு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
ஏனெனில் அந்த நேரத்தில் சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கப்படுவதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. சஹ்ரான் புலனாய்வுத் தகவல்களை வழங்கினார். அவ்வாறெனினும் சஹ்ரான் தொடர்பில் இவர்கள் நன்கு அறிவார்கள். என முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், நீதிக்கான மகளிர் அமைப்பின் உறுப்பினருமான நிரோஷா அதுகோரல, கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை முன்னெடுத்த, ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கடந்த 23ஆம் திகதி நாடாளுமன்றில் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த ஆணைக்குழு, மைத்திரி மற்றும் பலருக்கு எதிராக தண்டனைச் சட்டத்தின் பொருத்தமான விதிகளின் கீழ் குற்றவியல் வழக்குகளை தாக்கல் செய்வது குறித்து பரிசீலிக்குமாறு சட்டமா அதிபருக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள், சில விடயங்களை மூடிமறைக்கிறார்களா என்ற சந்தேகங்கள் எழுவதாக தெரிவித்துள்ள, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நிரோஷா அதுகோரல, தாக்குதல் தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச, ஆட்சியின் போது பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச, மொஹமட் சஹ்ரானை உளவாளியாகப் பயன்படுத்திய விடயத்தை சுட்டிக்காட்டியுள்ள நிரோஷா, அவரை புலனாய்வுத்துறைக்கு அறிமுகப்படுத்தியது யார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சஹ்ரானிடமிருந்து உங்களுக்கு எவ்வாறானா புலனாய்வுத்துறை தகவல் கிடைத்தது? 2015ற்குப் பின்னர், சஹ்ரானுக்கு என்ன நடந்தது? தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏனையவர்களை விட சஹ்ரானைப் பற்றி நன்கு தெரியும் என நான் நினைக்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில், ஜனாதிபதி ஆணைக்குழு, தற்போதைய ஜனாதிபதியை கேள்வி கேட்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர், சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கிய பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புகள் காணப்படுவதாகவும், தற்போது இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்படும், சாரா என அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரனை கண்டுபிடிப்பது குறித்து இலங்கை அரசு இந்தியாவிடம் எவ்வித விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்களை குறிவைத்து, ஏப்ரல் 21, 2019 அன்று தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தற்கொலை மற்றும் குண்டுத் தாக்குதல்களில், 250ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு, 500ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்ய, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 2019 செப்டம்பர் 21ஆம் திகதி ஐந்து பேர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ, தேசிய புலனாய்வுத் துறை முன்னாள் தலைவர் சிசிர மெண்டிஸ், முன்னாள் பொலிஸ் மா அதிபர், பூஜித் ஜயசுந்தர, முன்னாள் அரச புலனாய்வு பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், நந்தன முனசிங்க ஆகியோருக்கு எதிராக, குற்றவியல் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்ய குறித்த ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
இதற்கிடையில், பௌத்த மற்றும் பிற மத அமைப்புகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்விற்கு அமைய, பொது பல சேனா அமைப்பு தடை செய்யப்பட வேண்டுமென பரிந்துரைத்துள்ளது. மேலும், வஹாபிசம் மற்றும் வஹாபி அறிஞர்களின் போதனைகள் மற்றும் வெளியீடுகளைத் தடைசெய்தல் மற்றும் அனைத்து தவ்ஹீத் அமைப்புகளும் வஹாபி அமைப்புகளாக இருப்பதால் அவற்றையும் தடைசெய்ய வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளது.