ஜனாதிபதி இன்று அதிகாலை வேளையில் நாட்டில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கை விமானப்படைக்குச் செந்தமான விமானத்தின் மூலம் மலைதீவிற்கு வெளியேறியமை தொடர்பாக ஊடகங்களிலும் பல்வேறு சமூக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், குறித்த செய்தி தொடர்பில் இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளதாவது,
நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு அமைய பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் ஜனாதிபதி மாலைதீவிற்கு செல்ல விமானம் வழங்கப்பட்டதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
இலங்கையின் அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க, தற்போதைய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைய அந்த விமானம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் பாதுகாப்பு அமைச்சகத்தின் முழு அனுமதியின் கீழ் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து குடிவரவு, சுங்க மற்றும் பிற சட்டங்களுக்கு உட்பட்டு, ஜனாதிபதி மற்றும் அவரது துணைவியார் மேலும் இரு பாதுகாவலருடன் மாலைதீவிற்கு செல்ல 2022 ஜூலை 13 ஆம் திகதி விமானப்படையினால் ஒரு விமானம் வழங்கப்பட்டதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.