உலக பல்கலைக்கழகங்களின் ‘வெபோமெட்ரிக்ஸ்’ தரவரிசையின் படி இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கொழும்புப் பல்கலைக்கழகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
அதற்கமைய, கொழும்புப் பல்கலைக்கழகம் முதலிடத்தையும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் இரண்டாமிடத்தையும், பேராதனை பல்கலைக்கழகம் மூன்றாமிடத்தையும், மொரட்டுவ பல்கலைக்கழகம் நான்காவது இடத்தையும் பெற்றுள்ளன.
இந்த வரிசையில், ருஹுணு, களனி, ரஜரட்டை, யாழ்ப்பாணம், வடமேற்கு, கிழக்கு, சப்ரகமுவ மற்றும் திறந்த பல்கலைக்கழகம் முறையே ஐந்தில் இருந்து 12வது இடத்துக்கு தரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. உலகின் சிறந்த பல்கலைக்கழக தரவரிசை இந்த ஆண்டு, அமெரிக்காவின் ‘ஹார்வர்டு’ பல்கலைக் கழகம், உலகின் சிறந்த பல்கலைக் கழகமாக முதலிடத்திலும், ‘ஸ்டான்போர்ட்’ பல்கலைக் கழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
அதேவேளை கடந்த ஆண்டும் இந்த தரவரிசையில் இதே பல்கலைக்கழகங்கள் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்திருந்தன. இலங்கையில் உள்ள கொழும்பு பல்கலைக்கழகம் உலக தரவரிசையில் 1531 வது இடத்தையும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் 1964 வது இடத்தையும், பேராதனை பல்கலைக்கழகம் 1974 வது இடத்தையும் பெற்றுள்ளது.
கடந்த வருடம் வெளியிடப்பட்ட தரவரிசையில் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கொழும்புப் பல்கலைக்கழகம் முதலிடத்தைப் பெற்றிருந்ததுடன், உலகத் தரவரிசையின்படி 1591ஆவது இடத்தையும் பெற்றிருந்தது. அதன்படி இவ்வருடம் உலக தரவரிசையில் கொழும்புப் பல்கலைக்கழகம் 30 இடங்கள் முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.