கொழும்பு துறைமுகத்தில் இறக்குமதி கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்பட்டிருந்த நெரிசல் தற்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
மேலதிக சுங்கப் பணிப்பாளர் மற்றும் சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக இறக்குமதி கொள்கலன்களை அனுமதிப்பதற்கு கூடுதல் நாட்கள் எடுக்க வேண்டியிருந்தாகவும், இறக்குமதி கொள்கலன்களின் எண்ணிக்கை அதிகரித்ததே இதற்கு காரணம் என்றும் சீவலி அருக்கொட தெரிவித்தார்.
இதவேளை, ஒரு நாளைக்கு சுமார் 1,200 இறக்குமதி கொள்கலன்கள் வந்த நிலையில், சில நாட்களில் இது 2,900 ஆக உயர்ந்ததாகவும், இதனால் இறக்குமதி கொள்கலன்களை அனுமதிப்பதற்கு கூடுதல் நேரம் எடுக்க வேண்டியிருந்ததாகவும் மேலதிக சுங்கப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், இன்று காலை(29) நிலவரப்படி இந்த தாமதம் முற்றிலும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், கொழும்பு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட வேண்டிய அனைத்து கொள்கலன்களும் சுங்கத்தால் அனுமதிக்கப்பட்டு நிறைவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மேலதிக சுங்கப் பணிப்பாளர் மற்றும் சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட மேலும் தெரிவித்துள்ளார்.

