கல்யாணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லையே என்ற ஏக்கம் உங்களுக்கு இருந்தால் அதை விட்டுத்தள்ளுங்கள் . உங்கள் கவலையை போகும் கருகாத்தநாயகி தாயாரை சென்று வணங்கி வாருங்கள். அம்மனின் ஆசியுடன் அழகான குழந்தை சீக்கிரம் பிறக்கும். தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்கருக்காவூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோவில். கி.பி ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த கோவிலான இது அப்பர், ஞானசமந்தரால் தேவாரம் பாடப்பெற்ற திருத்தலங்களில் முக்கியமானது.
முன்னொரு காலத்தில் இங்கு வாழ்ந்த தம்பதியர் சிறந்த சிவ பக்தர்களாக விளங்கினர். நீண்ட நாட்களாக குழந்தையில்லாமல் தவித்து இத்தலத்து இறைவனையும் தாயாரையும் வணங்கி குழந்தை வரம் பெற்றனர். அந்த பெண்மணி கருவுற்று இருக்கும் வேளையில் அவளது கணவன் வெளியூர் சென்றுவிட்டான். அந்த நேரத்தில் அவள் வீட்டிற்கு பிட்சை கேட்டு ஒரு அடியார் வந்தார். அவர் வந்திருந்த நேரத்தில் கர்ப்பகாலத்தில் ஏற்படும் மயக்கம் காரணமாக மயங்கி வீட்டில் படுத்திருந்தாள் அந்தப்பெண். அடியவர் வந்திருப்பது அவளுக்கு தெரியாது. ஆனால் அடியவரோ இந்தப்பெண் தன்னை அவமானப்படுத்தியதாக நினைத்து சாபமிட்டு சென்றதால் அந்தப்பெண்ணின் கரு கலைந்தது. இதனால் தீராத சோகத்தில் அம்பிகையை சென்று அவள் வணங்க அம்பிகை அவள் முன்னே தோன்றி கலைந்த கருவை மீண்டும் உண்டாக்கி அந்த கரு குழந்தையாக பிறக்கும் வரை தானே கருவை காத்து அருள்புரிந்தார் என்பது வரலாறு.
இதன் விளைவாக இத்தலத்து அம்மன் கருகாத்தநாயகி என்ற பெயரால் வணங்கப்படுகிறார். ஈசன் முல்லைவனநாதர் என்ற திருநாமம் கொண்டு அருள்பாலிக்கின்றார். எனவே குழந்தை வரம் வேண்டும் தம்பதியர் இத்தலத்து அம்மனை வணங்கினால் குழந்தைப்பேறு நிச்சயமாக கிடைக்கும் என்பது ஐதீகம்.