சென்னையில் பத்து ரூபாய்க்கு மளிகை கடையில் குளிர்பானம் வாங்கி குடித்த சிறுமி வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் மாநிலமெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை பெசண்ட்நகர் ஓடைக்குப்பம் பகுதியை சேர்ந்த சதீஷ் – காயத்ரி தம்பதியின் இளைய மகள் தரணி(13) நேற்று முன் தினம் வீட்டின் அருகே இருக்கும் மளிகை கடையில் ரூ.10 கொடுத்து Togito Cola என்ற குளிர்பானத்தை வாங்கி குடித்திருக்கிறார். அடுத்த சில நிமிடங்களில் வாந்தி எடுத்திருக்கிறார். அவர் மூக்கில் இருந்து ரத்தத்துடன் சளி வடிந்துள்ளது. இதைப்பார்த்த சகோதரி பெற்றோருடன் சொல்ல, பெற்றோர் ஓடிவந்து மகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் முன்னரே இறந்துவிட்டதாக தெரிவிக்கவும் பெற்றோர் கதறி துடித்தனர்.
தகவல் அறிந்த போலீசார், வழக்கு பதிவு செய்து சிறுமி குளிர்பானம் வாங்கிய கடையில் உள்ள குளிர்பானங்களை பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆய்வு முடிவுகள் வந்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், சிறுமியின் மரணம் குறித்து செய்தி பரவியதை அடுத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குறிப்பிட்ட கடையில் சோதனை நடத்தி மீதமுள்ள குளிர்பானங்களை கைப்பற்றினர்.
சிறுமி உயிரிழந்த சம்பவத்தின் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்து ஆத்தூர் கிராமத்தில் இயங்கி வந்த அக்சயா புட் புராடக்ட்ஸ் எனும் அந்த குளிர்பான தயாரிப்பு ஆலையினை, உணவுபாதுகாப்பு அதிகாரி ஜெகதீஸ் சந்திரபோஸ் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர் சீல் வைத்தனர்.
பரிசோதனை முடிவுகள் வரும் வரைக்கும் அந்த குளிர்பான ஆலையை மூடிவைக்க உத்தரவிட்டுள்ளனர்.