குடும்பத்தகராறினால் இளைஞர் ஒருவரை அடித்துக்கொலைசெய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது திருகோணமலை புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதையடுத்து இன்று காலை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் புல்மோட்டை- அரபாத் நகர் பகுதியைச் சேர்ந்த ஏ.ஜீ.சதாம் (28) என புல்மோட்டை பொலிஸாரின் முதற்கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது.
நேற்றிரவு (20) குடும்பத்தகராறு காரணமாக உயிரிழந்தவரின் மனைவியின் சகோதரர் தாக்கியதிலேயே இச்சம்பவம் இடம் பெற்றதாகவும் தெரியவருகின்றது.
இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் படுகாயமடைந்தவர் புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பொலிசார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை புல்மோட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

