பிரித்தானியாவின் முதல் கௌரவக் கொலை குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் சக மாணவரும் பிபிசி தொலைக்காட்சிக்காக ஆவணப்படங்கள் எடுப்பவருமான Athar Ahmad என்பவர் இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.
குர்திஷ் இஸ்லாமியரான Abdalla Yones என்பவர், சதாம் உசேனின் கொடூர இராணுவ ஆட்சிக்கு பயந்து ஈராக்கிலிருந்து பிரித்தானியாவுக்கு அரசியல் அகதியாக வந்தவர். அவரது மகள் Heshu (16).
பள்ளிக்கு வரும் Heshu, நேர்த்தியாக சீருடை அணிந்து, அமைதியாக முன்னுதாரணமான மாணவியாகத்தான் முதலில் இருந்துள்ளார்.ஆனால், காலப்போக்கில் மேலை நாட்டு கலாச்சாரத்தால் கவரப்பட்டு, வசீகரிக்கும் மேக் அப் அணிந்து தன்னை வெளிக்காட்டிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறாள்.
பள்ளியில் அவளைத் தெரியாத ஆண்களே இல்லை எனும் அளவுக்கு பிரபலமான Heshuவுக்கு, 18 வயதான லெபனான் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ இளைஞன் ஒருவனுடன் காதல் ஏற்பட்டுள்ளது.
வீட்டில் கட்டுப்பாடுகள் நிறைந்த இஸ்லாமிய பெண்ணாக காட்டிக்கொண்ட Heshu, வெளியே மேற்கத்திய பெண்ணாக நவநாகரீகமாக உலாவந்துள்ளார்.தான் மீண்டும் குர்திஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட இருப்பதையும், அங்கு தனக்கான கணவன் காத்திருப்பதையும் அறிந்து கடும் அதிர்ச்சியடைந்திருக்கிறாள் Heshu.
இந்நிலையில், கிறிஸ்தவ இளைஞன் ஒருவனுடன் அவளுக்கு காதல் ஏற்பட, குடும்ப விதிகளை மீறிய Heshu குடும்ப கௌரவத்தை களங்கப்படுத்தியதற்காக 2002ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.
அவளை கொலை செய்தது, அவளுடைய தந்தை! 17 முறை Heshuவைக் கத்தியால் அவர் குத்தியும், அவரிடமிருந்து தப்பிய Heshu குளியலறைக்குள் சென்று பதுங்கிக் கொள்ள, குளியலறைக் கதவை உடைத்து உள்ளே நுழைந்த அவளது தந்தை, அவளை கழுத்தை அறுத்துக் கொன்றிருக்கிறார்.
2002ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 12ஆம் திகதி, Heshuவைக் கொன்றுவிட்டு, தனது கழுத்தையும் அறுத்துக்கொண்டு, லண்டனிலுள்ள தனது வீட்டின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார் Heshuவின் தந்தையான Yones.
ஆனால், அவர் உயிர் தப்பிவிட, பொலிசாரிடம் தன் வீட்டுக்கு அல் குவைதா தீவிரவாதிகள் வந்து தன் மகளைக் கொலை செய்துவிட்டு, தன்னையும் தாக்கி வீட்டின் மாடியிலிருந்து தள்ளிவிட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார் Yones.
ஆனால், விசாரணையில் உண்மை வெளியே வந்துவிட்டது. 2003ஆம் ஆண்டு சிறையிலடைக்கப்பட்டார் Yones. பிரித்தானியாவில் கௌரவக் கொலைக்காக முதன்முதலில் சிறை சென்றவர் Yonesதான்!