ஒவ்வொரு பிரஜைக்கும் டிஜிடல் அடையாள அட்டையை வழங்கும் நிகழ்ச்சி அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
யுனிக் அடையாள அட்டை என்ற பெயரில் 15வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் டிஜிடல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும், இந்நிகழ்ச்சித் திட்டம் தொழில்நுட்ப அமைச்சின் கீழ், அடுத்த ஆண்டில் பாரிய நிகழ்ச்சித் திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக தொழில் நுட்ப அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இந்நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக, அரசாங்கத்தின் சேவைகள் பலவற்றை வினைத்திறனாக மாற்றுவதாகும். பிரஜையொருவரின் பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியவற்றை இதனூடாக டிஜிடல் மயப்படுத்துவதாகும்.
12 மில்லியன் ரூபா நிதி இந்நிகழ்ச்சித் திட்டத்திற்காக செலவிடப்படுவதுடன் இதற்காக இந்தியாவின் நிதியுதவி கிடைக்கப்பெறவுள்ளது.
இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுடனான இணக்கத்திற்கு ஏற்ப விசேட குழுவொன்று இத்திட்டத்திற்காக நியமிக்கப்பட்டுள்ளது.
இதனால் வினைத்திறனாகும் அரச சேவைகளில் இலஞ்ச ஊழல் தடைப்படும். நிவாரணம் தேவைப்படும் மக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு அனைத்து நிவாரணம் இவ்வடையாள அட்டை ஊடாக வழங்கப்படும்.
அப்பாவி மக்கள் தமக்கு இழைக்கப்படும் அநியாயங்களை இப்புதிய நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் நிறுத்தப்படும். மக்களுக்குத் தமது பிரதேசத்திலிருந்தே இச்சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் கனக ஹேரத் குறிப்பிட்டார்.
மேலும் அரச சேவைக்கு அவசியமான வலையமைப்பு மற்றும் முகில் கணிப்பு (Cloud – உட்கட்டமைப்பு வசதி) ஆகிய இந்நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக அடுத்த ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தவிருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
டிஜிடல் தொழில்நுட்பத்தை அவதானிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கனக ஹேரத் சுட்டிக்காட்டினார்.
டிஜிடல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை புதுப்பிப்பதற்காக அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
விசேடமாக விவசாயத்துறைக்கும் டிஜிடல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
E Parliament எனும் நிகழ்ச்சித் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்த வருடத்தில் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியைப் பயன்படுத்த வேண்டியேற்பட்டது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அது 2023 இல் 3மில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பெருந்தோட்டத்துறை, ஆடைக் கைத்தொழில் போலன்றி இது அதிக வசதியுடன் நடைமுறைப்படத்த முடிந்த தகவல் தொழில்நுட்பக் கைத்தொழில் துறைக்காக 20,000 துறை சார்ந்தவர்கள் அவசியம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதற்கிணங்க, எதிர்காலத்தில் கலைப் பட்டத்திற்கு, தகவல் தொழில்நுட்பப் பாடத்தை உள்வாங்குவதற்கு எதிர்பார்ப்பதாவும் அது தொடர்பாக கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி வருவதாகவும் அமைச்சர் கனக ஹேரத் தெளிவுபடுத்தினார்.
பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்தவர்களுக்கு தொழிற்சந்தைக்குள் நுழைய முடியும் விதமாக பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாகவும், அவை அடுத்த ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நாடு பூராகவும் உள்ள 1000 பாடசாலைகளுக்கு இணைய வசதிகள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.