ஐக்கிய தேசியக்கட்சி அழிவடைந்தமைக்கு சுமந்திரனே முக்கிய காரணமென கல்முனை மறுமலர்ச்சி மன்றத் தலைவர் நஸீர் ஹாஜியார் தெரிவித்துள்ளார்.
கல்முனையில் (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் நஸீர் ஹாஜியார் மேலும் கூறியுள்ளதாவது, “ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்ற அரசியலுடன் பின்னிபிணைந்து காலத்தின் தேவையினால் டயஸ்போராவினால் கொண்டு வரப்பட்டவரே சாணக்கியன். அதாவது எவ்வாறு சுமந்திரனை ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து உருவாக்கியது போன்று தான்.
சுமந்திரனின் தந்தை, வடக்கில் இராணுவத்தால் நூலகம் எரிக்கப்பட்டபோது ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய பிரதிநிதியாக இருக்கின்றார். பாதுகாப்பு நிமிர்த்தம் பிள்ளைகளுடன் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்.
அங்கு அக்குடும்பம் ஐ.தே.க சார்பு உள்ள குடும்பமாக செயற்படுகின்றது. கடந்த நல்லாட்சி காலத்தில் தமிழர்களின் கருத்துக்களை உட்புகுத்துவதற்காக ஒரு சிறந்த ஒருவர் தேவைப்பட்டார். அவர் ஒரு புத்திசாலி. ஐ.தே.க சார்பானவர்.
அவரை தேசிய பட்டியல் கொடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக நாடாளுமன்றம் அனுப்புகின்றனர். அவரை உள்வாங்கியதனால்தான் ஐ.தே.க அழிந்தது.
அதேபோன்று டயஸ்போராவானது மஹிந்த குடும்பத்துடன் நெருக்கமான சிங்கள குடும்பங்களுடன் பரிட்சயமான மூன்று மொழிகளையும் சரளமாக பேசக்கூடிய ஒரு திருமணமாகாத துடிப்புள்ள இளம் வாலிபனை கூட்டமைப்பின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
இதேவேளை நடந்து முடிந்த பொத்துவில்- பொலிகண்டி பேரணியில் முஸ்லீம்கள் எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கின்றார்கள் என்பதை உலகத்திற்கு காட்டியுள்ளனர் ” என அவர் குறிப்பிட்டுள்ளார்.