37 ஆண்டுகளுக்கு முன்பு கனேடியர்கள் உட்பட 329 பேரை பலிவாங்கிய ஏர் இந்தியா விமானம் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட சம்பவத்தில், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவர், பிரிட்டிஷ் கொலம்பியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரிபுதாமன் சிங் மாலிக் (Ripudaman Singh Malik) என்னும் அந்த நபர், நேற்று, பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள சர்ரேயில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
1985ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 23ஆம் திகதி, கனடாவிலிருந்து லண்டன் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று அட்லாண்டிக் சமுத்திரத்தின்மீது பறந்துகொண்டிருந்தபோது, திடீரென வெடித்துச் சிதறி மாயமானது.
இந்த கோர விபத்தில், அந்த விமானத்தில் பயணித்த 329 பேருமே கொல்லப்பட்டார்கள். அவர்களில் 280 பேர் இந்தியாவுக்குச் சென்றுகொண்டிருந்த கனேடியர்கள். அவர்களில் 86 பேர் சிறுபிள்ளைகள்! அதுபோக, வேறொரு விமானத்தைக் குறிவைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்று டோக்கியோ விமான நிலையத்தில் வெடித்ததில், பயணிகளின் உடைமைகளை கையாண்டுகொண்டிருந்த ஊழியர்கள் இருவர் கொல்லப்பட்டார்கள். ஆக மொத்தம் உயிரிழந்தவர்கள் 331 பேர்.
1984ஆம் ஆண்டு, சீக்கியர்களின் புனிதத்தலமான பொற்கோவிலுக்குள் இராணுவம் நுழைந்ததை எதிர்த்து, சீக்கிய தீவிரவாதிகள் இந்த விமானத்தில் குண்டு வைத்ததாக கருதப்படுகிறது.
அந்த பயங்கர வெடிகுண்டு சம்பவத்தின் மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் Talwinder Singh Parmar என்ற நபர், இந்தியாவில் பொலிசாரால் கொல்லப்பட்டார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் பின்னர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். அவர்களில் மாலிக் ஒருவர்.
கனடா வரலாற்றிலேயே அந்த விமான விபத்து மிகவும் மோசமானதாக கருதப்படுகிறது.
அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட மாலிக், சர்ரேயில் சொந்தமாக தொழில் செய்துகொண்டிருந்திருக்கிறார்.
நேற்று, காலை 9.30 மணியளவில், யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் மாலிக் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மாலிக் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பல்வேறு வகையான உணர்வுகளைத் தூண்டியுள்ள நிலையில், அவரைக் கொன்றவர்களைக் கண்டுபிடிக்க பொதுமக்களுடைய உதவியை பொலிசார் நாடியுள்ளார்கள்.