ஒன்பது வயது சிறுவன் ஒருவனை மருத்துவமனையில் அனுமதித்த தாயிடம், என்னை ஏன் நோயாளியாக்குகிறீர்கள் என அவன் கதறியதை தற்செயலாக கவனித்தார் செவிலியர் ஒருவர்.
அவுஸ்திரேலியாவின் சிட்னியில், ஒரு பெண் தன்னுடைய ஒன்பது வயது மகனை ஆஸ்துமா பிரச்சினைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
ஆனால், அவன் குணமடைவதற்கு பதிலாக, அவனது நிலைமை மோசமாகியுள்ளது. காய்ச்சல் ஏற்பட்டு குழப்பமடைந்தவன் போல ஏதேதோ பிதற்றிக்கொண்டிருந்திருக்கிறான்.
மருத்துவர்களால் அவனுக்கு என்ன பிரச்சினை என்பதைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. அவனுடைய இரத்தத்தை பரிசோதித்தபோது, அதில் மலத்தில் காணப்படும் சில கிருமிகள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், என்னை ஏன் நோயாளியாக்குகிறீர்கள் என அந்த சிறுவன் தன் தாயிடம் கேட்பதை ஒரு செவிலியர் தற்செயலாக கவனித்துள்ளார்.
எதற்காக இப்படி செய்கிறீர்கள், எனது குளுக்கோஸ் ஏற்றும் குழாயில் இந்த முறை என்ன செய்தீர்கள் என்றெல்லாம் அவன் தன் தாயிடம் கதறுவதையும் வேறு சில செவிலியர்கள் கேட்டுள்ளார்கள்.
ஆக, அந்த 39 வயது பெண், அந்த சிறுவனை மருத்துவமனையிலேயே வைத்திருப்பதற்காக, அவனுக்கு குளுக்கோஸ் ஏற்றும் குழாயில் மலத்தைக் கலந்துள்ளார்.
இந்த அதிரவைக்கும் தகவல் தெரியவந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நச்சுப்பொருள் ஒன்ற பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அந்த சிறுவன், தன் தாய் எந்த தவறும் செய்யவில்லை என்றும், தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் தான் அப்படித்தான் ஏதேதோ உளறுவதுண்டு என்றும் கூறியுள்ளான். என்றாலும், அந்த பெண் மீதான வழக்கு விசாரணை தொடர்கிறது.

