அமெரிக்காவில் உறைந்துபோன குளத்தில் தவறி விழுந்த 6 வயது சகோதரியை காப்பாற்ற, கண்ணிமைக்கும் நேரத்தில் குதித்த 10 வயது சிறுவன் மரணமடைந்துள்ள சம்பவம் மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது.
ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ள சிறுமி, தற்போது இயற்கையாக சுவாசிக்கிறார் எனவும், குணமடைந்து வருகிறார் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறுமி தனது சகோதரர் பெஞ்சமின் மற்றும் மற்றொரு சகோதரருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை,
ஷெல்பி கவுண்டியில் உள்ள மில்லிங்டனில் அவர்களது குடியிருப்புக்கு அருகே உறைந்த குளத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று Abigail Luckett என்ற அந்த 6 வயது சிறுமி, குளத்துக்குள் தவறி விழுந்துள்ளார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் முடிவெடுத்த பெஞ்சமின்(10) தன் சகோதரியைக் காப்பாற்ற குளத்தில் குதித்தான், ஆனால் அவர்கள் இருவரும் தண்ணீரிலிருந்து வெளியேற முடியாமல் தவித்துள்ளனர்.
இந்த நிலையில் உதவி கேட்டு குடியிருப்புக்குள் விரைந்த இன்னொரு சகோதரன் தமது தந்தை Robert Luckett உடன் திரும்பி வந்தான்.
ஆனால் ராபர்ட் லக்கெட்டால் தமது மகளை மட்டுமே வெளியே எடுக்க முடிந்துள்ளது. இதனிடையே தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சிறுவன் பெஞ்சமினையும் மீட்டு, இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால், சிறுவன் பெஞ்சமின் சிகிச்சை பலனின்றி, மருத்துவமனையில் வைத்து மரணமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு பிறகு ஷெல்பி கவுண்டி ஷெரிப் அலுவலகம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது,
அதில் உறைந்த குளங்கள், குட்டைகள் மற்றும் ஏரிகளைச் சுற்றி கவனமாக இருக்குமாறு குடியிருப்பாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது