இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 20 இலட்சத்துக்கும் மேற்பட்ட கொவிட் தடுப்பூசிகள் காணாமல் போயுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டள்ளது.
இது தொடர்பில் விசேட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரச உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த தடுப்பூசிகள் தொடர்பில் எவ்வித பதிவும் இடம்பெறவில்லை எனவும், எனவே, அவற்றுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் உறுதியான தகவல் கிட்டவில்லை எனவும் தெரியவருகின்றது.
தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கை தொடர்பான தரவுகள் வழங்கும் பொறுப்பு பொது சுகாதார பரிசோதகர்களுக்கே உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கருத்து வெளியிடுகையில்,
” மேற்படி தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும். எனினும், அவை தொடர்பான தரவுகளை சேமிக்க முடியாமல் போனதால்தான் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.
தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைக்கு மத்தியிலும் சுகாதார பரிசோதகர்களுக்கு தரவுகளை பதிவுசெய்யும் வேலையையும் செய்யவேண்டியுள்ளது. ஒரு தகவலை பதிவுசெய்வதற்கு 4 முதல் 5 நிமிடங்கள்வரை செல்லும். ஒரு சுகாதார பிரிவில் நாளாந்தம் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம்வரை தடுப்பூசிகள் ஏற்றப்படுகின்றன.
அப்பணியையும் செய்யும்வேலை ஏனைய பணிகளையும் முறையாக செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கணினி மற்றும் ஆளணி பலம் வழங்கப்படவில்லை. இதனால் சுகாதார பரிசோதகர் ஒருவருக்கு பல விடயங்களை செய்ய வேண்டியுள்ளது.
மக்களுக்கு குறித்த தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருந்தாலும் அது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன என அவர் சுட்டிக்காட்டினார்