அதிநவீன கண்காணிப்பு வசதிகளுடன் கூடிய சீன போர்க்கப்பல் ஒன்று இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓராண்டுக்குப் பிறகு சீனாவின் இரண்டாவது கண்காணிப்புக் கப்பல் இலங்கைக்கு வந்திருப்பது இந்தியாவைக் கவலையடையச் செய்துள்ளது.
சீனாவின் சந்தேகத்திற்குரிய விண்வெளி ஆய்வுக் கப்பலான ‘யுவான் வாங்-5’, செயற்கைக்கோள் தொழில்நுட்பத்துடன் கண்காணிக்கும் திறன் கொண்ட போர்க்கப்பல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்தியாவின் முக்கியமான இராணுவ நிலைகளை உளவு பார்க்க வாய்ப்பு உள்ளதால் இந்தக் கப்பல் வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
எனினும் இந்த எதிர்ப்பையும் மீறி இலங்கை அப்போது அனுமதி வழங்கியதகா தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் அதிநவீன கண்காணிப்பு வசதிகளுடன் கூடிய சீன போர்க்கப்பலான ‘ஹாய் யாங் 24 ஹாவ்’ இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த கப்பலின் வருகை குறித்து இந்திய அதிகாரிகளிடம் சீனா தெரிவித்தபோதும் அதன் வருகை குறித்து இந்திய தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டது.
எனினும் இந்தக் கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கியுள்ளது. இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை (ஆகஸ்ட் 12) புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் போர்க்கப்பல் வருவதற்கு சீன அதிகாரிகள் முன்கூட்டியே அனுமதி கோரியிருந்தனர். எனினும் இந்தியத் தரப்பினால் வெளிப்படுத்தப்பட்ட கவலைகள் காரணமாக, கப்பலுக்கு அனுமதி வழங்குவதில் இலங்கை தாமதம் செய்தது