2020 ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் நடைபெற்ற அதியுயர் சேவைகளில் ஒன்றான இலங்கை கணக்காளர் சேவைப் போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பதுளைவீதி இராஜபுரத்தினைச் சேர்ந்த ராஜேந்திரன் தீபன் மட்டுப்படுத்தப்பட்ட கணக்காளர் சேவைப் பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளைப் பெற்று,
அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றும் தமிழ்பேசும் சமூகத்துக்கும் மட்டக்களப்பு மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மட்டக்களப்பு கித்துள் மற்றும் கரடியனாறு பாடசாலைகளில் தனது ஆரம்ப மற்றும் இடைநிலை கல்வியினை கற்ற இவர் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் உயர்தர வணிகப்பிரிவில் கல்வி கற்று கிழக்கு பல்கழைக்கழகத்திற்கு தேர்வானதுடன் 2012 ஆண்டில் முகாமைத்துவ பட்டப்படிப்பினை பூர்த்தி செய்ததுடன்.
2012 தொடக்கம் 2016 வரை கரடியனாறு விதை உற்பத்தி பண்ணையில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடமையாற்றியுள்ளார்.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை கணக்காய்வாளர் போட்டிப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று கணக்காய்வாளராக பணி புரிந்து வந்தார்.
இந்நிலையில் கடந்தமுறை நடைபெற்ற கணக்காளர் போட்டிப்பரீட்சையில் ஒரு பாடத்தில் மாத்திரம் 3 புள்ளிகளை தவற விட்டு தமக்கான வாய்ப்பை இழந்த ரா.தீபன் திட்டமிடல் போட்டிப் பரீட்சையில் தேசிய ரீதியில் 32வது இடத்தினை பெற்றிருந்ததுடன் அந்த சந்தர்ப்பத்தில் 31பேர் மாத்திரமே தேர்வாகியிருந்தனர்.
இவ்வாறாக தன்னுடைய அயராத முயற்சியில் பல தடைகளையும் சாவால்களையும் எதிர்கொண்ட இவர் பரீட்சைக் கையேடுகள் புத்தகங்களை பெறுவதிலே பல சிரமங்களை எதிர்கொண்டாலும் இவர் தன்னால் முடிந்த வரை தான் கற்ற கல்வியை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் மனிதாபிமான உள்ளம் கொண்டவராக காணப்படுகின்றார்.
தனது முயற்சியில் இடைவிடாது கடின உழைப்புடன் செயற்பட்ட இவர் கடந்த வருடம் நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட இலங்கை கணக்காளர் சேவைப் போட்டிப் பரீட்சையில் இலங்கையில் முதலிடம் பிடித்து பெருமை சேர்த்துள்ளார்.
தனது அனுபவத்தினை பகிர்ந்து கொண்ட ரா.தீபன் தமிழ் பேசும் சமூகத்திலிருந்து இலங்கையின் அதியுயர் சேவைப் போட்டிப் பரீட்சைகளில் தமிழ் மாணவர்கள் சித்தியடைய முன்வர வேண்டும் என்றும்,
நாம் கடினமான முயற்சி செய்தால் யாரும் எம்மை தடுத்துவிட முடியாது என்றும் பரீட்சைக்காக தயார்படுத்தும் போது வெட்டுப்பபுள்ளிகளை இலக்காக கொண்டு கற்காமல் 100 புள்ளிகளை கருத்திற் கொண்டு கற்றால் எமது நம்பிக்கை ஒருநாளும் வீண் போகாது என்று குறிப்பிட்ட அவர்,
மற்றவர்களோடு நாம் போட்டி போடாது 100 புள்ளிகளை ஒவ்வொரு பாடத்திலும் பெறுவதற்கு பரீட்சை வினாத்தாளோடு போட்டி போடும் போதே எமது வெற்றி உறுதியாகும் என தெரிவித்தார்.
எதிர்காலத்திலே தன்னாலான சேவையினை சமூகத்துக்காக அர்ப்பணிப்போடு வழங்குவேன் என அவர் உருக்கமாக பதிலளித்தார்.
இவ்வாறு சித்தி பெற்று மட்டக்களப்பு மண்ணுக்குப் பெருமை சேர்த்த தீபனுக்கு கல்விச் சமூகம், உள்ளிட்ட பலரும் தமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.