இலங்கையில் தினத்தோறும் கண்டறியப்படும் 105 புற்றுநோயாளிகளில் 46 பேர் புற்றுநோயால் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் (NCCU) பணிப்பாளர் வைத்தியர் இஷானி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு இன்று (01-02-2023) சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டில் மொத்தம் 38,229 புதிய புற்றுநோயாளிகள் கண்டறியப்பட்டனர் மற்றும் அவர்களில் 16,691 பேர் இந்த நோயால் உயிரிழந்தனர்.
பெண்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதும், ஆண்களில் உயிரிழப்பு அதிகமாக இருப்பதும் கவனிக்கப்பட்டது.
2020 ஆம் ஆண்டில் மொத்தம் 20,395 பெண்களும் 17,834 ஆண்களும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புற்றுநோயால் கண்டறியப்பட்ட நோயாளிகளில் 50 சதவீதம் பேர் உயிரிழக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.