பிரபல சிங்கள இலக்கியவாதியும் ராஜபக்சவினரின் தேசப்பற்று தொடர்பான ஆலோசகருமான கலாநிதி குணதாச அமரசேகர, சில காலத்திற்கு முன்னர் “கற்சிலை மற்றும் வெற்றுச்சிலை” என்ற பெயரில் நூல் ஒன்றை எழுதினார்.
தேசப்பற்றின் கற்சிலை மற்றும் வெற்றுச்சிலைகள் எவை என்பதை குணதாச அமரசேகர மட்டுமே அறிவார். எனினும் தேசப்பற்றாளர்களின் வரலாற்றை எடுத்துக்கொண்டால், ஒரு கற்சிலை மட்டுமே இருந்தது. அவர் காமினி ஜயசூரிய, அவர் 1987 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை உடன்படிக்கை மூலம் வடக்கு, கிழக்கு இணைக்கப்படுவதை எதிர்த்தார்.
உடன்படிக்கைக்கு எதிரானவர்கள் வெளியில் செல்ல கதவுகள் திறந்தே இருப்பதாக அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன ஆளும் கட்சியின் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
காமினி ஜயசூரிய, இலங்கை – இந்திய உடன்படிக்கையை ஏற்க தயாராக இருக்கவில்லை. 1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சிறப்பு உரை ஒன்றை நிகழ்த்த எழுந்தார்.
ஆளும் கட்சியின் அதிகளவான உறுப்பினர்கள் உரையாற்ற இருப்பதால், அவருக்கு ஆளும் கட்சியின் நேரத்தை ஒதுக்க முடியாது என அன்றை பிரதி சபாநாயகர் நோமன் வைத்தியரத்ன கூறினார்.
அப்போது அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் அனுர பண்டாரநாயக்க, காமினி ஜயசூரிய உரையாற்றுவதற்கு தனது நேரத்தை வழங்குமாறு கூறினார். அதனை செய்ய முடியாது என பிரதி சபாநாயகர் குறிப்பிட்டார்.
விவாதத்திற்கு மத்தியில் காமினி ஜயசூரிய அரசாங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் கடிதத்தை அனுப்பினார். அவர் அன்று நாடாளுமன்றத்தில் ஆற்றவிருந்த உரை பின்னாளில் பத்திரிகை ஒன்றில் வெளியானது.
“நாட்டில் எந்த அரசாங்கமாவது நாட்டின் சிறுபான்மை சமூகத்திற்கு அதிகமான அதிகாரங்களை வழங்க தயாரான வேளைகளில் எமது ஐக்கிய தேசியக் கட்சி அதனை எதிர்த்தது. 1957 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க – செல்வநாயகம் உடன்படிக்கை இதற்கு சிறந்த உதாரணம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்ப்பு காரணமாகவே அந்த உடன்படிக்கை கைவிடப்பட்டது. இதனால், இந்த கொள்கையில் இருந்து விலகிச் செல்வது நாம் எமது மனசாட்சிக்கு செய்யும் துரோகம்.
எமக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்த இனத்தின் பெரியோர்களை எம்மால் மறக்க முடியாது. அவர்கள் தம்மை விட நாட்டை முன்நிறுத்தி செயற்பட்டது மட்டுமல்ல, அதற்கான உயிர்களை தியாகம் செய்தனர்” என காமினி ஜயசூரிய அந்த உரையில் கூறியிருந்தார். இவர் உண்மையான தேசப்பற்றாளர்.
குணதாச அமரசேகர கூறுவது போல் வெற்றுச் சிலை அல்ல. கற்சிலை. அப்படியானால், அமரசேகர போன்றவர்கள் ஆட்சியில் அமர்த்திய தற்போதைய அரசாங்கத்தில் இருப்பது எப்படியான சிலைகள்?.
குணதாச அமரசேகரவுக்கு அமைய இலங்கையில் தற்போது இருக்கும் தேசப்பற்றுள்ள கற்சிலை விமல் வீரவங்ச. இந்த விமல் வீரவங்ச, 2019 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.
அமெரிக்க படையினருடன் கூடிய போர் கப்பல் ஒன்று திருகோணமலை துறைமுகத்திற்கு வெளியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அது மிகப் பயங்கரமான சூழ்ச்சி எனவும் விமல் வீரவங்ச அந்த கடித்தில் குறிப்பிட்டிருந்தார்.
6 ஆயிரத்து 500 அமெரிக்க படையினருடன் கப்பல் ஒன்று திருகோணமலை துறைமுகத்திற்கு எதிரில். இறுதி உடன்படிக்கையில் கைச்சாத்திட வெளிவிவகார அமைச்சர் அமெரிக்கா சென்றுள்ளார். உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதும் அமெரிக்க படையினர் இலங்கை மண்ணில் இறங்குவார்கள். ஜனாதிபதி அவர்களே அமெரிக்காவின் இந்த தலையீட்டை தடுத்து நிறுத்துங்கள் என விமல் வீரவங்ச அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.
விமல் வீரவங்சவின் இந்த கடிதத்தின் பிரதிபலனாக அவர்களுக்கு அரசாங்கம் ஒன்று கிடைத்தது. அந்த அரசாங்கம் பதவியேற்று சில மாதங்கள் செல்லும் முன்னர் அமெரிக்க படையினர் திருகோணமலையில் தரையிறங்கினர்.
இலங்கை இராணுவ தளபதிக்கு அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் அமெரிக்க படையினர், இலங்கை இராணுவத்தினருடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவின் இந்தோ பசுபிக் கட்டளை இணையத்தளம் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் திகதி தகவல் வெளியிட்டிருந்தது.
அப்படியானால், எங்கே போனது விமல் வீரவங்சவின் தேசப்பற்று என்ற கற்சிலை?.
மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் காலத்தில் அமெரிக்க, இலங்கை இராணுவ தளபதி அமெரிக்காவிற்கு வர தடைவிதித்திருந்த நிலையில், அமெரிக்க இராணுவம் திருகோணமலையில் தரையிறங்கி இருந்தால், என்னவெல்லாம் நடந்திருக்கும்?.
ஆனால் விமல் வீரவங்ச தற்போது அது பற்றி மூச்சு விடுவதில்லை. குணதாச அமரசேகரவின் மற்றைய தேசப்பற்றுள்ள கற்சிலை பிவித்துரு ஹெல உறுமயின் உதய கம்மன்பில. அவர் 2016 ஆம் ஆண்டு இந்தியாவை பற்றி இப்படி கூறியிருந்தார்.
“ அரசாங்கம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொடுக்க இந்தியா பட்ட கஷ்டத்திற்கு, அரசாங்கம் பரிசுகளை வழங்க நேரிட்டுள்ளது. அம்பியூலன்ஸ் வண்டிகளாக இந்தியா எமக்கு வழங்குவது ட்ரோஜன் குதிரை. இதன் கசப்பான உண்மை என்னவென்றால், இந்தியா இலங்கையின் வரலாற்று எதிரி என்பதாகும்” எனக் கூறியிருந்தார்.
மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் காலத்தில் இந்தியா, இலங்கைக்கு உதவும் போது கம்மன்பில இந்தியாவை வரலாற்று எதிரி என காண்பித்தார். தற்போது இந்தியா, ராஜபக்ச அரசாங்கத்திற்கு உதவும் போது உண்மையான நண்பனாக தெரிவது புதுமையான ஆச்சரியம்.
இந்திய பிரதமர் மோடி திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை கையகப்படுத்த வருகிறார் என 2017 ஆம் ஆண்டு மே முதலாம் திகதி காலிமுகத்திடலில் கர்ஜித்த விமல் வீரவங்ச, தற்போது அவரது தேசப்பற்றுள்ள தோழரான உதய கம்மன்பில, திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு வழங்கும் போது வாயை மூடிக்கொண்டிருப்பது இதனை விட பெரிய கேலிகூத்து.
காலிமுகத்திடலில் 2017 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி நடந்த கூட்டத்தில் உரையாற்றிய விமல் வீரவங்ச,
“ நான்காம் திகதி இந்திய பிரதமர் மோடி வருகிறார். அவர் வெசாக் தோரணங்களை வேடிக்கை பார்க்க வரவில்லை. அப்படித்தான் சொல்கிறார்கள். நாட்டை காட்டிக்கொடுக்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திட அவர் வருகிறார். ரணில் இந்தியாவுக்கு போகிறார். எண்ணெய் தாங்களை மட்டுமல்ல, திருகோணமலை நகரத்தையும் இந்தியாவிடம் ஒப்படைப்பார்கள்” என தெரிவித்திருந்தார்.
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்க அரசாங்கம் எடுக்க போகும் தீர்மானம் நாட்டை காட்டிக்கொடுக்கும் செயல் என விமல் வீரவங்ச 2018 ஆம் ஆண்டு 9 ஆம் மாதம் 22 ஆம் திகதி கூறியிருந்தார்.
மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் காலத்தில் திருகோணமலை எண்ணெய் தாங்கிளை பெற்றுக்கொள்ள இலங்கைக்கு வந்தவர் இந்திய பிரதமர் மோடி. எனினும் அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை எதிர்த்தார்.
எனினும் இம்முறை இலங்கை இந்திய வெளிவிவகார செயலாளர் திருகோணமலை எண்ணெய் தாங்கிளை பார்வையிட வந்து, எண்ணெய் தாங்கிகளுக்கு எதிரில் நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
கம்மன்பில இந்திய உயர்ஸ்தானிராலயத்திற்கு மண்டியிட்டு சென்று எண்ணெய் தாங்கியை வழங்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். எனினும் விமல் வீரவங்சவிடம் இருந்து எந்த சத்தமும் வரவில்லை.
அடுத்த குருணாகல் வைத்தியசாலையின் மருத்துவர் ஷாபியின் கருத்தடை அறுவை சிகிச்சை. இது பற்றி விமல் வீரவங்ச கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் திகதி அற்புதமான கதை ஒன்றை கூறியிருந்தார்.
“ இந்த மருத்துவர் ஷாபியின் கருவறை போரில் சிக்கியுள்ள தாய்மாருக்கு நீதியை பெற்றுக்கொடுங்கள். இந்த மருத்துவர் செய்த சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு பின்னர் தாம் பிள்ளைகளை பெற்றெடுக்கும் பாக்கியத்தை இழந்து விட்டதாக 300 தாய்மார் கூறுகின்றனர். இது நாட்டில் பிறப்பெடுக்கவிருந்த தங்க பிள்ளை குட்டிகளை கொலை செய்தமைக்கு ஈடானது” என குறிப்பிட்டிருந்தார்.
விமல் வீரவங்ச அங்கம் வகிக்கும் அரசாங்கத்தின் கீழ் அண்மையில் மருத்துவர் ஷாபியை அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்தது. நிலுவை சம்பளத்துடன் அவரை மீண்டும் சேவையில் இணைக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர், கடந்த 2019 ஆம் ஆண்டு மே 15 ஆம் திகதி விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய தேசப்பற்றுள்ள கற்சிலைகள் இணைந்து ஊடக சந்திப்பை நடத்தினர்.
வஹாப் அடிப்படைவாதத்தின் தந்தைகளாக கருதப்படும் றிசார்ட், சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை தமது அமைக்கும் அரசாங்கத்தில் இணைத்துக்கொண்டால், தாம் அந்த அரசாங்கத்தில் இருந்து விலகி விடுவோம் எனக் கூறியிருந்தனர்.
வஹாப்வாத அடிப்படைவாதத்திற்கு எதிரான நேரடியாக இருந்துக்கொண்டு றிசார்ட், சாலி, ஹிஸ்புல்லா போன்ற இலங்கையின் அடிப்படைவாத பிதாக்களை நாங்கள உருவாக்கும் அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ளக் கூடாது.
இந்த நேரடியான நிலைப்பாட்டை நாங்கள் இன்று நாட்டுக்கு முன்னால் வைக்கின்றோம். இதனை விடுத்து வாக்குகளை பெற எதிர்பார்த்து, மக்களுடன் ஓடி பிடித்து விளையாட அரசாங்கத்திற்கோ, எதிர்க்கட்சிக்கோ தார்மீக உரிமையில்லை என விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் குறிப்பிட்டிருந்தனர்.
இப்படி பேசிய விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஹிஸ்புல்ல, கோட்டாபயவிற்கு வாக்குகளை பெற்று தரும் போது வாயை மூடிக்கொண்டிருந்தனர்.
அதேபோல் 20 வது திருத்தச் சட்டத்தையும் வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்றவும் றிசார்ட் மற்றும் ஹக்கீம் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொண்ட போதும் வாயை திறக்கவில்லை.
உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது றிசார்ட் மற்றும் ஹக்கீம் ஆகியோரின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உதய கம்மன்பிலவுக்கு ஆதரவாக வாக்களித்தமை மிகப் பெரிய நகைச்சுவை.
அன்று 2015 ஆம் ஆண்டு மைத்திரி – ரணில் அரசாங்கம், ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் நிபந்தனைக்கு அமைய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை திருத்த முயற்சித்த போது, பாதுகாப்பு தரப்பினரை பலவீனப்படுத்தி, பயங்கரவாதிகளுக்கு உந்துசக்தியை வழங்க போகின்றனர் என்று கூறிய வீரவங்ச மற்றும் கம்மன்பில ஆகியோர், கோட்டபாய ராஜபக்சவின் அரசாங்கம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களை செய்ய முயற்பட்டுள்ள நிலையில், ஓடி ஒழிந்து விட்டனர்.
இலங்கையில் 1956 ஆம் ஆண்டு புரட்சியின் ஆரம்பத்தில் தேசப்பற்றுள்ள சிங்கள அரசியல் இருந்தது. அந்த அரசியலின் இறுதி நபர் காமினி ஜயசூரிய. தேசப்பற்றை தேசப்பற்றால் அழிப்பது விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில போன்ற பொய்யான தேசப்பற்றாளர்கள்.