நாட்டின் வறுமையை இல்லாது ஒழிப்பதற்காக இவ்வாண்டு இருபது இலட்சம் குடும்பங்களை மையப்படுத்தி மனைசார் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தை எமது அரசாங்கம் திட்டமிட்டு செயற்படுத்தவுள்ளது. இதற்கு நாட்டு மக்கள் அனைவரும் அரசாங்கத்தின் பொருளாதார புத்தெழுச்சி வறுமை ஒழிப்பு செயலணியின் எண்ணத்தை கவனத்தில் எடுத்து, தங்களுக்கான மனைசார் பொருளாதார வேலைத் திட்டத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதன் மூலம் பொருளாதாரத்தை பன்மடங்காக அதிகரித்து, நாட்டை முன்னேற்றுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நாம் அனைவரும் இனம்,மதம்,மொழி கடந்து கைகோர்க்க வேண்டும்.
இவ்வாறு பின்தங்கிய கிராம அபிவிருத்தி, மனைசார், கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நாட்டை கட்டியெழுப்பும் சுபிட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் சௌபாக்கியா உற்பத்தி கிராம நிகழ்ச்சித் திட்டத்தின் செழிப்பான வாரத்தினையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்திற்கான செழிப்பான உற்பத்தி கிராமங்களை ஆரம்பிக்கும் அங்குரார்ப்பண வைபவத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி தட்சணகெளரி தினேஷ் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனும்,சிறப்பு அதிதிகளாக பட்டிப்பளை பிரதேச சபையின் தவிசாளர் என்.புஷ்பலிங்கம், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, பனை அபிவிருத்தி சபையின் முகாமையாளர் எஸ்.நாகேஸ்வரன், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் கலந்துகொண்டார்கள்.
பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கடுக்காமுனை கிராம பொதுமக்களது பிரசன்னத்துடன் பனைசார் பொருட்கள் உற்பத்தி கிராம ஆரம்ப நிகழ்வானது அதிதிகளினால் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பனைசார் உற்பத்திப் பொருட்களை களஞ்சியப்படுத்துவதற்கான வசதியினை கொண்ட கட்டடத்திற்கான அடிக்கல் இராஜாங்க அமைச்சரினால் நடப்பட்டது. ங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது: எல்லா வளங்களும் நிறைந்த அற்புத நாடு எங்கள் நாடாகும். குறிப்பாக கடல்வளம், நீர்வளம், நிலவளம் நிறைந்துள்ள எங்கள் நாட்டில் விவசாய உற்பத்திகளின் வீழ்ச்சியினால் நாம் உயிர்வாழ்வதற்கான உணவுப் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. அரிசி, உருளைக்கிழங்கு, இஞ்சி, பயறு, கடலை, உழுந்து உட்பட தேவையான சாதாரண உணவுப் பொருட்களையும் ஏனைய பொருட்களையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து பயன்படுத்தி உயிர் வாழ்கின்றோம். நமது நாடு முன்னேற்றம் அடைய வேண்டுமானால் கிராமங்கள் முன்னேற வேண்டும். கிராமங்களில் மனைசார் பொருளாதார உற்பத்திகள் அதிகரிக்க வேண்டும். கிராமங்களில் உள்ள வளங்களை பயன்படுத்தி கிராமங்கள் முழுவதும் துறைசார் மனைப்பொருளாதார உற்பத்தி வேலைகள் இடம்பெற வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்து கிராமங்களில் பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டும்.
ஒரு கிலோ கிராம் மஞ்சள் 6000 ரூபா அல்லது 7000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. எனவே அதிக விலைக்கு பொருட்களை வாங்குவதை விட எமக்குத் தேவையான உணவுப் பொருட்களை நாமே உற்பத்தி செய்து நாமே அதனை உணவாக எடுத்துக் கொள்ள முடியும். இஞ்சி, மஞ்சள், கிழங்கு, உழுந்து உட்பட நாட்டு மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் உற்பத்திக் கிராமங்களை நாடு முழுவதும் உருவாக்குவதற்கு பொருளாதார புத்தெழுச்சி வறுமை ஒழிப்பு செயலணி ஜனாதிபதி தலைமையில் திட்டமிட்டுள்ளது.
ஒவ்வொரு உற்பத்திக் கிராமத்தின் மூலம் கிராமங்கள் பொருளாதரத்திலும், மனைசார் பொருளாதாரத்திலும் தன்னிறைவு அடையும். கிராமங்கள் தன்னிறைவு அடைந்தால்தான் நாடு பொருளாதரத்தில் தன்னிறைவு பெற்று சுபீட்சம்மிக்க நாடு உருவாக்கப்படும். இதனை எமது அரசாங்கம் முன்னெடுத்து வருவதுடன் நாட்டை முன்னேற்றும் தூரநோக்கு சிந்தனையுடன் ஜனாதிபதி மற்றும் பிரதமர், அமைச்சர்கள் செயற்படுகின்றார்கள்.
எமது சமூகம் நுகர்வோர் சமூகமாக இருப்பதற்கு அப்பால் வியாபார சமூகமாக மாற்றமடைய வேண்டும். பொருளாதார பலத்தில் நாம் முன்னேறும் போது சகல விடயங்களிலும் உயர்வைப் பெற முடியும். இவ்வாறாக பல அபிருத்திச் செயற்பாடுகளின் மூலம் எமது மாவட்டத்தை நாம் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும்.
தனது குடும்பம்,பிள்ளைகளை வாழ வைப்பவன் மனிதன் ஆவான். தன்னைச் சுற்றியுள்ள நான்கு பேரையாவது வாழவைப்பவன் மாமனிதன் என்ற வாக்கிற்கமைய அனைவரும் உங்களால் முடிந்த வரை மற்றவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்குரிய உதவிகளை வழங்குங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.
பனைசார் தொழில் முயற்சியாளர்களின் தேவைப்பாடுகள், குறைகள் குறித்து அதிதிகள் கவனமெடுத்ததுடன் அவற்றை எவ்வாறு எதிர்காலத்தில் நிவர்த்திப்பது, குறைகளை நிவர்த்திப்பதற்காக எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் தமது கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
பட்டிப்பளை பிரதேசத்தில் சுமார் 4000 பனைமரங்களைக் கொண்டமைந்த கடுக்காமுனை பிரதேசமானது சரியான முறையில் இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டது. இதன் போது பிரதேசத்தைச் சேர்ந்த பனைசார் உற்பத்தியாளர்களின் உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன்,அவற்றை அதிதிகள் பார்வையிட்டு கொள்வனவிலும் ஈடுபட்டிருந்தனர்.