ஆண்டுதோறும் இனி ஜூலை 18 ஆம் திகதி, தமிழ்நாடு நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். மேலும், எல்லைப் போராட்டத் தியாகிகளுக்கு ரூ.1 லட்சம் பொற்கிழி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு,
1956 ஆம் ஆண்டு நவம்பா் 1 ஆம் திகதி இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதன்படி, அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து ஆந்திரம், கா்நாடகம், கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. 2019 முதல் நவம்பா் 1 ஆம் திகதியை தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது.
ஜூலை 18 ஆம் திகதி: மெட்ராஸ் மாகாணம் என்று இருந்தது மாற்றப்பட்டு, 1967 ஜூலை 18 ஆம் திகதி தமிழ்நாடு என பெயா் சூட்டப்பட்டது. அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட இந்த மாற்றத்தின் அடிப்படையில் ஜூலை 18 ஆம் திகதி தான் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்பட வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்துள்ளனா். நவம்பா் 1 ஆம் திகதி என்பது எல்லைப் போராட்டத்தை நினைவு கூறும் வகையிலேயே அமையும் எனக் கருத்துக் கூறியுள்ளனா்.
பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை கவனமாகப் பரிசீலித்து தமிழ்நாடு எனப் பெயா் சூட்டப்பட்ட ஜூலை 18 ஆம் திகதியே தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும்.
எல்லைப் போராட்டத் தியாகிகள் : எல்லைப் போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்ற தியாகிகளை தமிழ்நாடு அரசு போற்றி சிறப்பித்து வருகிறது. தமிழகத்தில் இப்போது 110 போ் எல்லைக் காவலா்களாக உள்ளனா். அவா்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.5,500, மருத்துவப் படியாக ரூ.500 வீதம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், எல்லைக் காவலா்களின் மரபு உரிமையாளா்கள் 137 பேருக்கு மாத உதவித் தொகையாக ரூ.3 ஆயிரம், மருத்துவப் படியாக ரூ.500 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. எல்லைப் போராட்டங்களில் நேரடியாக ஈடுபட்டு சிறைசென்று தியாகம் செய்து இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லைக் காவலா்கள் 110 பேருக்கு சிறப்பு நிகழ்வாக, வரும் 1 ஆம் திகதி ரூ.1 லட்சம் வீதம் பொற்கிழி வழங்கப்படும்.