இந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 1.7 மில்லியன் பேர் மாற்றுத்திறனாளிகள்ஆவர். இந்நாட்டிலுள்ள பொது வசதிகளில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக அவர்களின் தேவைகளைப்பூர்த்தி செய்வதில், அதாவது மருத்துவ வசதிகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நடவடிக்கைகளைப் பெறுவதில்அவர்கள் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் மற்றும் திறன்கள் அங்கீகரிக்கப்பட்டு, நாட்டின் பொதுவான குடிமக்களை இலக்காகக் கொண்ட அனைத்து நலன் மற்றும் மேம்பாட்டு செயல்முறைகளிலும் மாற்றுத்திறனாளிகளை ஈடுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு மாற்றுத்திறனாளிகள் சமூகம் எதிர்நோக்கும் பௌதீக மற்றும் கொள்கை ரீதியான தடைகள் அகற்றப்பட வேண்டும். அவ்வாறே மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் சவால்களை சமாளிக்க அவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்க அரசாங்கம் முயற்சி எடுக்கவேண்டும்.
இதன் பிரகாரம், இதை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் கருதி, பின்வரும் கேள்விகளுக்கு அரசாங்கத்திடமிருந்து குறிப்பிட்ட பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்க்கிறேன்.
01. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயல்திட்டம் 2020 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு முன்வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அப்போதைய பொறுப்பான அமைச்சர் 2020.02.06 ஆந் திகதி அன்று பார ளுமன்றத்தில் தெரிவித்தார். அந்த செயல்திட்டம் இது வரை ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை? இந்ததிட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?
02. மாற்றுத்திறனாளிகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 33 ஆவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகோல்களின் பிரகாரம் திருத்தப்பட்ட புதிய சட்டமூலம் இதுவரை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமைக்கான காரணங்கள் யாது? இதனை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறதா? அவ்வாறு எதிர்பார்க்கும் பட்சத்தில் எப்போது சமர்ப்பிக்கப்படும்?
03. காது கேளாத மாற்றுத்திறனாளிகள் தங்கள் தேவைகளை நிறைவேற்ற சைகை மொழிஅவசியமாகும். தற்போது வரைவு செய்யப்பட்ட சைகை மொழிச் சட்டமூலம் ஏன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை? இந்த சட்டமூலம் எப்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது?
04. இலங்கையிலுள்ள அரச நிறுவனங்களில் சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்கள் எத்தனை பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்? அந்த எண்ணிக்கை போதும் என்று அரசாங்கம் கருதுகிறதா? அவ்வாறில்லாவிட்டால் எதிர்காலத்தில் அரச சேவைக்கு சைகை மொழி பெயர்ப்பாளர்களை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா?
05. சிறப்புத் தேவையுடைய குழந்தைகள் பாடசாலை கல்வியைப் பெறுவதற்கு அரசாங்கத்திடமுள்ள திட்டம்என்ன? இந்த குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க போதுமான சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இருக்கிறார்களா? பாடசாலை கல்விக்குப் பிறகு இந்தக் குழந்தைகளை தொழிற்கல்விக்கு வழிநடத்த அரசாங்கத்திடமுள்ள திட்டம் யாது?
06. அணுகல் வசதிகள் இல்லாததால் மாற்றுத்திறனாளிகள் சமூகம் அரச நிறுவனங்களின் சேவைகளைப் பெறுவதற்குத் தடையாக இருப்பது அரசாங்கத்திற்கு தெரியுமா? அவ்வாறெனில், அதற்காக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? எதிர்கால கட்டிட கட்டுமானத்திற்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் மாற்றுத்திறனாளி சமூகத்தின் அணுகல் வசதிகள் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும் என்றவிதிகளை கொண்டு வர அரசாங்கம் செயல்படுமா?
07. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் ரூ.5000/- உதவித் தொகையை சமுர்த்திவங்கிகள் ஊடாக மாத்திரம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக கடந்த 2 மாதங்களாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் உண்மைத் தன்மை யாது? இந்தக் கொடுப்பனவை சமுர்த்தி வங்கியின் ஊடாக மாத்திரம் வழங்குவதன் மூலம் மாற்றுத்திறனாளி சமூகம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளனர் என்பது அரசாங்கத்திற்கு தெரியுமா? இதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் யாது?
எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாராளுமன்ற அமர்வில் இன்று பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.