இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட்டின் கார் விபத்துக்குள்ளானதில், அவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..
டெல்லியிலிருந்து, உத்தரகண்ட்டின் ஹரித்வார் மாவட்டத்திலுள்ள தன் வீட்டுக்கு காரில் ரிஷப் பண்ட் சென்று கொண்டிருந்த போது, ஹம்மத்பூர் ஜால் என்ற பகுதியிலுள்ள எல்லைப்பகுதியில் அவர் கார் விபத்துக்கொள்ளாகியுள்ளது. அங்கிருந்து டிவைடரில் கார் மோதிய நிலையில், தீப்பற்றி எரியத்தொடங்கியுள்ளது கார். இன்று அதிகாலை 5.15 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. சம்பவம் அறிந்து எஸ்.பி தீஹத் ஸ்வப்னா கிஷோர் சிங் நேரில் சென்று விசாரித்து வருகிறார்.
அங்கிருந்தவர்களால் ரிஷப் பண்ட் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார் அவர். ரிஷப் பண்ட் முதுகுப்பகுதியிலும், தலைப்பகுதியிலும் கடுமையாக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 25 வயதாகும் ரிஷப் பண்ட், தற்போது இந்திய அணியில் மிக முக்கிய நட்சந்த்திர வீரராவார். அடுத்தடுத்து இந்திய அணி பல்வேறு தொடர்கள், ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க உள்ள நிலையில் ரிஷப் பண்ட்டுக்கு விபத்து ஏற்பட்டிருப்பது அவரது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.
ரிஷப் பண்ட், தனது பி.எம்.டபிள்யூ காரை தானே ஓட்டிச்சென்று கொண்டிருக்கையில் இந்த விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை அளித்துள்ள தகவல்களின்படி, தற்போது அவர் உடல்நலம் சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.