இந்தியாவில் கொரோனா பாதிப்பு அடுத்த வாரம் உச்சமடையும் என்று மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 3.86 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 87 லட்சத்து 62 ஆயிரத்து 976 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 31 லட்சத்து 70 ஆயிரத்து 228 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 53 லட்சத்து 84 ஆயிரத்து 418 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 8 ஆயிரத்து 330 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து 9-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநில அரசுகளும் கடுமையான முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அடுத்த வாரம் உச்சமடையும் என்று மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.மே மாதம் 3ம் திகதி முதல் 5ம் திகதி வரை கொரோனா பாதிப்பு உச்சமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.