இந்தோனேசிய கடற்படையின் காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பல் ஆழ்கடலில் விபத்துக்குள்ளாகி, அதில் பயணித்த 53 பணியாளர்களும் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாயமான நீர்மூழ்கிக்கப்பலின் உடைந்த பாகங்கள் சில மீட்ப்புக்குழுவினருக்கு கிடைத்துள்ள நிலையில் இத்தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாலி கடற்பகுதியில் வைத்து புதனன்று ஒரு நேரடி பயிற்சியின் போது அந்த நீர்மூழ்கிக் கப்பல் மாயமானது.
இந்த நிலையில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்ட நிலையில்,சனிக்கிழமை பகல் வரையில் மட்டுமே, அந்த 53 ஊழியர்களும் சுவாசிக்கும் அளவுக்கு ஆக்ஸிஜன் கையிருப்பு இருக்கும் என்ற பகீர் தகவலும் வெளியானது.
தற்போது இந்தோனேசிய கடற்படை தளபதிகள், உலுக்கும் அந்த தகவலை வெளியிட்டு, 53 ஊழியர்களும் மரணமடைந்துள்ளதாகவும், நீர்மூழ்கிக் கப்பல் ஆழ்கடலில் மீட்க முடியாதபடி 850 மீற்றர் ஆழத்தில் மூழ்கி உடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மாயமான ஜேர்மானிய தயாரிப்பு நீர்மூழ்கிக் கப்பலானது 500 மீற்றர் ஆழம் வரையில் செல்லும் அளவுக்கே கட்டமைக்கப்பட்டுள்ளது.பாலி கடற்பகுதியின் ஆழமானது 1,500 மீற்றருக்கும் மேல் என கூறப்படுகிறது. தற்போது மரணமடைந்துள்ள ஊழியர்களின் பிணம் கூட மீட்க முடியுமா என்பது சந்தேகமே என கடற்படை தரப்பு தெரிவித்துள்ளது.