நடிந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எம்முடன் இருந்தவர்கள் எதிரணி பக்கம் சென்றதால் தான் நாங்கள் அரசியலில் பலவீனமடைந்தோம் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்நிலையில் கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் இணைத்துக் கொள்ளவே முயற்சிக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (18-10-2024) பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இடம்பெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
தேர்தலில் வெற்றி மற்றும் தோல்வி என்பது இயல்பானது. வெற்றி, தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டும். பல்வேறு காரணிகளால் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தோம்.
எங்களுடன் இருந்தவர்கள் எம்மை விட்டு எதிரணி பக்கம் சென்றதால் பலவீனமடைந்தோம். எம்மை விட்டுச் சென்றவர்கள் தற்போது அரசியலில் நெருக்கடியாகியுள்ளமை கவலைக்குரியது.
இவ்வாறான நிலையில் அவர்கள் எம்முடன் மீண்டும் ஒன்றிணையலாம். அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என நாமல் தெரிவித்துள்ளார்.