ஒழுக்கம் – நன்னடத்தை என்பவற்றை பேணி நல்ல ‘குடி மக்களை’ உருவாக்க வேண்டியதற்கு பதிலாக நாட்டில் கொரோனா தொற்று பரவும் காலத்திலும், பார்களை- மதுபானசாலைகளை திறந்து போதையுடனான ´குடி மக்களை´ உருவாக்கும், மிக மோசமான செயலில் இந்த அரசாங்கம் ஈடுபட்டுள்ளதை காண முடிவதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய குமார் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
கொரோனா தொற்று மற்றும் மரணங்கள் சற்று குறைவடைந்து வரும் நிலையில் அரசாங்கத்தின் இந்த பார் திறப்பு தீர்மானம் கொரோனா பார்- மதுபான கொத்தணி ஒன்று உருவாக இடமளித்துள்ளது.
முழு நாடும் முடக்கப்பட்ட நிலையில், வருமானத்தை ஈட்ட பார்களை திறக்க அரசாங்கம் எடுத்த முடிவு மிகவும் கேவலமானது.
இந்த லட்சனத்தில், இன்று மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழான கட்டளைகளை திருத்த யோசனை முன்வைத்துள்ளது.
இந்த அரசாங்கத்தின், இராஜாங்க அமைச்சர் ஒருவர் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு குடிபோதையில் சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி உள்ளதுடன், செய்தி வௌியில் வந்ததும், குறித்த இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து மட்டும் விலகியுள்ளார்.
ஆனாலும், இராஜாங்க அமைச்சரின் இந்த செயற்பாடு குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றம் செய்திருந்தால், தக்க நடவடிக்கை எடுத்து, தண்டனை வழங்க வேண்டும்.
அத்துடன், உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், சிறைச்சாலைகளில் எவ்வித வழக்கு விசாரணைகளும் இன்றி பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள மலையகம் மற்றும், வடக்கு கிழக்கு உள்ளிட்ட அனைத்து தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
இன்று நாட்டின் நிலைமையை எடுத்துக் கொண்டால் மூன்று முக்கிய வார்த்தைகள் பிரபல்யம் அடைந்துள்ளன. அதுதான், ´இல்லை´, ´விலை உயர்வு´ ´தட்டுப்பாடு´,
அரிசி இல்லை அல்லது ´விலை உயர்வு´ அல்லது தட்டுப்பாடு
சீனி இல்லை, விலை உயர்வு, தட்டுப்பாடு,
பருப்பு இல்லை விலை உயர்வு, தட்டுப்பாடு,
பால்மா இல்லை, விலை உயர்வு, தட்டுப்பாடு,
கோதுமை மாவு இல்லை, விலை உயர்வு, தட்டுப்பாடு,
கேஸ் இல்லை, விலை உயர்வு தட்டுப்பாடு,
இப்படியாக வரிசை நீண்டு கொண்டே செல்கிறது.
அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய மக்கள் திண்டாட்டம் – மதுபானசாலைகளை திறந்து அரசாங்கம் கொண்டாட்டம்.
அத்தியாவசிய பொருட்கள் பின்கதவு வழியாகவும், மதுபானம் முன்கதவு வழியாகவும் வழங்கப்படுகிறது.
அதாவது, அத்தியாவசிய பொருட்கள் மறைமுகமாகவும், மதுபானம் நேரடியாகவும் விற்க்கப்படுகிறது.
இதுதான் நாட்டின் தற்போதய நிலைமை.
நமது நாட்டுக்கு அந்நிய செலாவணி ஈட்டித்தரும் தேயிலை உற்பத்தி துறை இன்று மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதுடன், இரசாயன உர இறக்குமதி தடையால் தேயிலை உற்பத்தி பாரிய அளவு குறைவடைந்துள்ளது.
இந்த உற்பத்தி குறைவை சமாளிப்பதற்காக சிலோன் டி என்ற தேயிலை தரத்தில் கை வைத்துள்ள அரசாங்கம், கடந்த ஆகஸ்ட் மாதம் 1ம் திகதியில் இருந்து அமுலாகும் வகையில் வௌிநாடுகளில் இருந்து கருப்புத் தேயிலையை இறக்குமதி செய்து அதில் 30% இலங்கை தேயிலையை கலந்து மீள தேயிலை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான தேயிலை சபையின் சுற்றறிக்கை இங்கு உள்ளது.
இத்திட்டத்தின் மூலம், தரமற்ற சிலோன் டீ சர்வதேச சந்தைக்குள் செல்ல வாய்ப்புக்கள் உள்ளது. இதனால் ‘சிலோன் டீ யின்’ தரம் கேள்விக்குறியாக்கப்படும். சர்வதேச சந்தையில் ஒருமுறை நாம் வாய்ப்பை இழந்தால் அதனை மீளப் பெறுவது கடினம்.
உதாரணமாக, 2015ம் ஆண்டு சுமார் 700 மில்லியன் கிலோ தேயிலை கொள்வனவு செய்த ஜப்பான் இன்று படிப்படியாக குறைந்து 200 தொடக்கம் 300 மில்லியன் தேயிலை மாத்திரமே கொள்வனவு செய்கிறது.
சேதன உர முறையில் ஒரு கிலோகிராம் தேயிலையின் உற்பத்தி செலவு 1,900 ரூபா. இது வழக்கமான தேயிலையின் உற்பத்தி செலவை விட மூன்று மடங்கு அதிகமாகும். எனவே, அரசாங்கம் எடுத்துள்ள இந்த நடவடிக்கையால் நாட்டின் தேயிலை உற்பத்தியின் எதிர்காலம் பாதிக்கப்படும், தோட்டத் தொழிலாளர்களுக்கு தொழில் வாய்ப்புகள் இழக்கப்படும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இரசாயன உர இறக்குமதிக்கு தடை விதித்து அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது. இந்நிலையில், சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் வந்தது போதாது என்று, தற்போது உர இறக்குமதி மூலம் புதிய பக்டீரியா வைரஸை கொண்டு வந்துள்ளனர். அதில், பாரதூரமான நோய்களை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான இரு பக்டீரியாக்கள் உள்ளடங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கம் நாட்டு மக்களின் உயிர்களுடன் விளையாடி மேலும் மேலும், அவர்களை ஆபத்தில் தள்ளிவிடப் பார்க்கிறது.
இன்று, நாட்டை பொருளாதார சிக்கலில் இருந்து மீட்க இருக்கும் ஒரே வழி சர்வதேச நாணய நிதியமும் – GSP+ வரிச் சலுகையுமாகும். இந்த இரண்டையும் பெறுவதற்கு நமது நாடு தகுதி உடையதாக இருக்க வேண்டும். இது பெரும் சவாலான விடயமாகும். இந்த சலுகைகளை பெறுவதில் பயங்கரவாத தடை சட்டம் பெரும் தாக்கத்தை செலுத்துகிறது.
நாட்டை பொருளாதார சிக்கலில் இருந்து மீட்க அஜித் நிவாட் கப்ரால் பொறுத்தமானவர் என்று அவரிடம் மத்திய வங்கி ஆளுநர் பதவியை கொடுத்தால், பதவி ஏற்று மறுநாளே, அதாவது கடந்த வௌ்ளிக்கிழமை 45.95 பில்லியன் ரூபா நாணயத்தாள்களை புதிதாக அச்சிட்டுள்ளார். பணம் அச்சிட்டு பொருளாதார பிரச்சினையை தீர்க்க முடியாது என்று பொருளாதார நிபுணர்கள் கூறியும் அதனை மீறி செயற்பட்டுள்ளனர்.
புதிய நிதி அமைச்சர் வந்த பின்பு ‘ தேனும் பாலும் ஓடும்’ என்று நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டது போலவே, புதிய மத்திய வங்கி ஆளுநர் நியமனமும் அமைந்துள்ளது. அரசாங்கத்தின் பொருளாதார திட்டங்கள் காரணமாக இன்று அந்நிய செலாவணி குறைந்து நாட்டில் டொலர் பற்றாக்குறை நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், கையிருப்பில் உள்ள டொலர்களை இறக்குமதிக்கு பயன் விடாது சுமார் 623 பொருட்களுக்கு உத்தரவாத தொகை அல்லது வைப்பு தொகை முறை மூலம் இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த இறக்குமதி கட்டுப்பாடு தடையால் உள்நாட்டில் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
எனவே, இந்த அரசாங்கத்திற்கு – நாட்டை திறம்பட ஆட்சி செய்ய முடியாது என்பது – இதன்மூலம் தௌிவாகிறது. அதனால். தங்களது இயலாமையை ஏற்றுக் கொண்டு – வீட்டுக்கு செல்வதே – இந்த அரசாங்கம் எடுக்கக் கூடிய – பொறுத்தமான தீர்மானமாக இருக்கும்.