கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகு 200கும் அதிகமான பிரித்தானியர்கள் மரணமடைந்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.பிரித்தானியாவில் மருந்துகள் மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறித்த தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆனால், கொரோனா தடுப்பூசிக்கும், மரணத்திற்கு தொடர்பு இல்லை என்றே குறித்த ஒழுங்குமுறை நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.மருந்துகள் மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,
பைசர் நிறுவன தடுப்பூசி எடுத்துக்கொண்ட 236 பிரித்தானியர்கள் ஒவ்வாமை உள்ளிட்ட அறிகுறிகளால் அவதிப்பட்டதாகவும், அது பின்னர் அவர்களின் மரணத்திற்கு காரணமாக அமைந்தது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், 90 பேர் ஆக்ஸ்போர்டு நிறுவன தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின்னர் மரணமடைந்துள்ளதாகவும், மூவர் தொடர்பில், அவர்களுக்கு எந்த தடுப்பூசி வழங்கப்பட்டது என்பதில் தெளிவான தகவல் தங்களுக்கு கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
தடுப்பூசி எடுத்த பின்னர் மரணமடைந்துள்ள பெரும்பாலானவர்கள் முதியவர்கள் எனவும், ஏற்கனவே அவர்கள் முதுமை தொடர்பான நோயால் அவதிப்பட்டு வந்தவர்கள் எனவும் ஒழுங்குமுறை நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும், தனித்தனியாக பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில், கொரோனா தடுப்பூசியால் அவர்கள் மரணமடைந்துள்ளார்கள் என உறுதிபட கூற முடியாது என தெரிவித்துள்ளனர்.
கொரோனாவுக்கு எதிராக பாதுகாப்பதற்கும், உயிர்களை காப்பாற்றுவதற்கும், இந்த பயங்கரமான தொற்றால் ஏற்படும் கடுமையான உடல் உபாதைகளைத் தடுப்பதற்கும் தடுப்பூசிகள் மிகவும் பயனுள்ள வழியாகும் என மருந்துகள் மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனத் தலைமை நிர்வாகி Dr June Raine கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
மேலும், இந்த தடுப்பூசிகளின் நன்மைகள் எந்தவொரு சிக்கலையும் விட அதிகமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரித்தானியாவில் இதுவரை 7.1மில்லியன் டோஸ் பைசர் நிறுவன தடுப்பூசி மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும்,3மில்லியன் ஆக்ஸ்போர்டு நிறுவன தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.