இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் பாடசாலை பெண் ஆசிரியர் ஒருவர் மர்மமான முறையில் மாயமான சம்பவம் குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.குறித்த விவகாரம் தொடர்பில் தற்போது மங்களகிரி பொலிசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குண்டூர் மாவட்டம் துல்லூரு மண்டலத்தில் உள்ள மண்டடம் ஜில்லா பரிஷத் பள்ளியில் இந்தி ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ஜான்சி ராணி.மங்களகிரி பகுதியில் அவரது கணவர் வீரஞ்சநேயுலு மற்றும் மகன், மகள் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 11 ம் திகதி காலை வழக்கம் போல் தனது இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்றுள்ளார் ஜான்சி ராணி.அன்று மதியம் வீரஞ்சநேயுலு தனது மனைவியுடன் மொபைலில் பேசியுள்ளார், மேலும் அன்று மாலை அவர் தமது குடியிருப்புக்கு திரும்பியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆனால், ஜான்சி ராணி ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயிலின் கிழக்குப் பக்கமாக அமைந்துள்ள கடைக்கு அருகில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தியதாகவும்,கடை உரிமையாளருக்கு பைக் சாவியைக் கொடுத்துவிட்டு, கணவர் வந்து வாகனத்தை எடுத்துக் கொள்வார் என்று கூறிவிட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து இரவும் அவர் குடியிருப்புக்கு திரும்பாத நிலையில், அவரது மகன் தமது தாயார் தொடர்பில் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.ஆசிரியர் மாயமான விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் பொலிசார் தற்போது பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
மட்டுமின்றி, கண்காணிப்பு கமெரா காட்சிகளையும் சேகரித்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.